"ஆப்பிளுக்கு முன்" நாவல் குறித்தான விமர்சனம்:
காந்தி - மனிதத்தின்மீது பேரன்பு கொண்ட பழமைவாதி:
![]() |
'ஆப்பிளுக்கு முன்' நாவலை படித்து முடித்தபோது, காந்தி எனும் மகத்தான ஆளுமையின் முழுமைகளை இவ்வளவு தாமதமாய் அறிய நேர்ந்தது குறித்து வருத்தமே மேலிட்டது. நேதாஜி, பகத்சிங், அம்பேத்கர், பெரியார் ஆகியோர்மீது அதீத பற்றும் பிரேமையும் கொண்ட பலருக்கு காந்தி என்றால் வேப்பங்காய்தான். அப்படிப்பட்டவர்கள் இந்நாவலைப் படிக்கநேரும் போது, "வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி" என்ற வரிக்கேற்ப அவர்மீது சில நல்ல அபிப்ராயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முற்றிலும் மகாத்மாவாக மாறிவிடுவாரா என்றால், அவரவர் புரிதலைப் பொறுத்தது. அவரை மகாத்மாவாக மாற்ற முனைப்பு காட்டும் நூல் இதுவல்ல என்பதே என்புரிதல். காந்தியின் அரசியல், அவரது கொள்கைகள், போராட்டங்கள் ஆகியவற்றை முதன்மைப் பேசுபொருளாக இந்நாவல் கொண்டிருக்கவில்லை. "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருந்தார். ஆனால், இரண்டில் எது கூத்து, எது காரியம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்" என்று ஆசிரியர் நாவலின் ஓரிடத்தில் சொல்லிச் செல்வார். அந்த ரகசியத்தில் மூக்கை நுழைக்காமல், காந்தியின் பிரம்மச்சரிய சோதனையை மட்டுமே மையக் கருவாய் வைத்து நாவலைத் தொடங்கி முடித்திருக்கிறார். முதல் சில பக்கங்களைப் படிக்க நேரும்போதே அதற்கான புரிதல் வந்துவிடுகிறது. காந்தியின் அரசியல்மீதான தேடலில் படிப்பவர்களுக்கு இதில் ஏமாற்றம்தான் மிஞ்சும் எனினும், காந்தியின் மிக முக்கியமான சில அந்தரங்க பக்கங்களை இதில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
பள்ளிக் காலங்களில் நேதாஜியைத்தான் இந்தியாவின் உண்மையான நாயகனாக நம்பியிருந்தேன். அடுத்து, நேதாஜியின் இடத்தை அம்பேத்கர் பிடித்துக்கொண்டார். காந்தியை சுதந்திர போராட்டத் தியாகிகளுள் மிக முக்கிய ஒருவராய் வைத்திருந்தேனே தவிர, மகாத்மாவாகப் போற்றியதில்லை. சிலர், "அவர் தனது இருபுறமும் இருபெண்களை அம்மணமாய்ப் படுக்கவைத்துத் தூங்குவார்" எனக் கிண்டலாய்ப் பேசும்போது, "என்ன எழவோ, போய்த் தொலையட்டும்" என்றுதான் கடந்திருக்கிறேன். பெரியார் தன்மகளையே திருமணம் செய்துகொண்டு புணர்ந்தார் என்பவர்களிடமிருக்கும் அதே வன்மமும் வக்கிரமும்தான் இவர்களிடமும் இருந்தது. காந்தி பற்றி பெரிய அளவிற்கு அப்போது நல்லெண்ணம் இல்லை என்பதால் கோபமேதும் வராது. பெண்களின் நிர்வாணத்தோடு தான் காம உணர்வின்றி படுத்திருத்தலை காந்தி ஒரு யாகமாக, வேள்வியாக மேற்கொண்டிருந்தார் என்பதையும், அதற்கு "பிரம்மச்சரியப் பரிசோதனை" என்பதாக பெயர் உண்டு என்பதையும் சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். அந்தளவிற்குத்தான் காந்தி பற்றிய வாசிப்பறிவு இருந்தது.
அத்தகைய பிரம்மச்சரியப் பரிசோதனைகள் குறித்து, வேறெந்த விளக்க நூலையும் இதுவரை நான் கண்டடையவில்லை. காந்தியின் சொற்பொழிவுகள், போராட்டங்கள், வாழ்க்கை வரலாறு பற்றிய பல கட்டுரைகளும் ஆய்வு நூல்களும் குவிந்துகிடக்கும் இன்றைய சூழலில், அவரது பி.பரிசோதனையைச் சரியான புரிதலோடும், வரலாற்றுத் தெளிவோடும், நேர்மையோடும் அணுகிப் பேசும் நூல்களைக் கண்டடைவது வெகுசிரமம். அத்தகைய குறையை இந்நூல் நிச்சயம் போக்கும் என்று நம்புகிறேன். தவிர, காந்தியவாதிகளைவிட மற்ற பிரிவினர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூலிது.
வரலாறு சார்ந்த புனைவுதான் இந்நூல். முன்னுரையில் ஆசிரியர், "இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை, எவ்வளவு இரண்டிற்கும் இடைப்பட்ட குழப்பங்கள் என்பது தொழில் ரகசியம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தொழில் ரகசியத்திலிருக்கும் உண்மை பொய்மைகளை ரகசியமாகவே விட்டுவிடாமல் ஆராய்ந்து பார்க்கும் ஆவலைத் தூண்டிவிடுகிறதெனில், இதைத்தான் இந்நாவலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.
ஆகா கான் அரண்மனை தொடங்கி, பிர்லா மாளிகை வரையான காந்தியின் அகம் குறித்து பேசும் இந்நாவல், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய வரலாற்று, அரசியல் நிகழ்வுகள் என்னவாகவிருக்கும் என்பதை அறிவதற்கான தேடலைத் தூண்டிவிடுகிறது. நாவலின் இறுதி வரிகளான, " 'BAPU - MY MOTHER' என்ற தலைப்பு அவள் மனதிலாடியது. மநுவின் முகம் மிகப் பொலிந்தது" என்பதை படித்து முடிக்கும்போது, அது நூலாக வந்திருக்கிறதோ? எனக் கேள்வி எழ, அடுத்த பக்கத்தில், குறிப்புதவி நூல்களில் முதலாவதாய் இருப்பதைக் கண்டு, மனம் ஒருவிதப் பூரிப்படைகிறது. மேலும் அதைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்படி இருக்கிறது.
பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பதன்மூலம் புற சூழல்களை தன்னால் மாற்றிட முடியும் என காந்தி நம்புகிறார். பிரம்மச்சரியத்தில் எவ்வளவு தேர்ச்சிபெற்றிருக்கிறோம் என்பதை அறிய நிர்வாணமாக பெண்களைத் தன்னோடு படுக்க வைத்து பரிசோதித்துப் பார்க்கிறார். அந்தப் பரிசோதனையில் பன்னிரெண்டாவது ஆளாக காந்திக்கு பேத்தி முறையான மநு வந்து சேர்கிறாள்.
காந்தி மநுவுடனான முதல் உரையாடலே சுவாரஸ்யமாய் இருந்தது. காந்தி தனது தந்தையின் மரணத்தின் போது உடன் இல்லாதிருந்தது பற்றியது அது. மநுவின் சொற்கள் காந்தியை கொஞ்சம் அசைத்துத்தான் பார்த்திருக்கிறது. இரண்டாவதாக அசைத்தது, பாவின் கல்லறையில் அவர்கள் இருவரிடையே நடந்த உரையாடலில்.
காந்தி, மநுவின் தந்தையான ஜெய்சுக்லாலைப் பார்த்து, "கிழவர்களைக் கிழவர்கள்தான் பார்க்க வருவார்கள். நீயே வரவில்லை என்றால் எப்படி!" எனக் கேட்கும்போதும் நேதாஜியின் உரையை மனு அவரிடம் படித்துக்காட்டும் போது, "ஒரு பிரம்மச்சாரி இப்படி எத்தனை பேருக்குத்தான் தந்தையாக இருப்பானோ!" எனச் சொல்லும்போதும் வசீகரிக்கவும் வியக்கவும் வைக்கிறார்.
பாவின் இறப்பிற்கு முந்தைய நிகழ்வுகள்பற்றி இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. பா தவிர்த்து பிற பெண்களுடன் அவர் இறப்பதற்கு முன்பே பிரம்மச்சிரியப் பரிசோதனையை ஆரம்பித்துவிட்டாரா காந்தி? மநுவிடம், சுஷீலாவுடன் குளிப்பதுகூட கந்தியின் கொள்கைதான் என்கிறார் பா. சொல்லிவிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்பு, சேவாக்ராம் ஆசிரமத்தில் நடந்த நிகழ்வொன்றை பா நினைத்துப் பார்க்கிறார். தனது நெருங்கிய சகாக்களிடம் காந்தி இதுபற்றி பேசும்போது, நேரத்தை சேமிக்கும்பொருட்டே இருவரும் ஒன்றாகக் குளிக்கிறோம் என்கிறார். சுஷீலாவின் நிர்வாணத்தை தான் பார்க்கவில்லை என்கிறார். அப்போது பிரம்மச்சரியப் பரிசோதனை என்ற சொல்லை அவர் பயன்படுத்தவுமில்லை. எனில், அவரது கொள்கை என பா எதைக் குறிக்கிறார் என்பது தெரியவில்லை.
பிரம்மச்சரியப் பரிசோதனையில் பங்கேற்ற வீணா, கஞ்ச்சன், லீலாவதி ஆகியோரில் ஒருவர் இவ்வாறு சொல்வார், "பாபு இதைப் பரிசோதனை என்கிறார். உண்மையில் இது அப்படித்தானா? கேள்விகள் எழத்தொடங்கியப் பின்தான் அப்படிச் சொல்லத் தொடங்கினார் எனத் தோன்றுகிறது". அடுத்து, சுஷீலா சொல்லியதாக மநுவிடம் தக்கர் பாபா சொல்வார், "முதலில் காந்தி பெண்களின் நெருக்கமான சில சேவைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினார். ஒருகட்டத்தில் அவை சர்ச்சைக்குள்ளான பின்னர் பிரம்மச்சரியப் பரிசோதனை எனும் சித்தாந்தம் கொண்டுவரப்பட்டது. இது ஒரு போர்வைதான்"
சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் இவை அமைந்திருக்கின்றன. அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில், பா உயிருடன் இருக்கும்போதே காந்தி பரிசோதனையை மேற்கொண்டிருப்பது பற்றி அறிய வருகிறது. இதை இன்னும் கூடுதலாக ஆசிரியர் விளக்கியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
"காந்தியை அவதூறு செய்துவிட்டேன் எனக் கோபமாய்க் காந்தியவாதிகளும் காந்தியைத் தோலுரித்துவிட்டதாய் மகிழ்வுடன் கோட்சேவாதிகளும் கிளம்பாதிருப்பீர்களாக" என்று ஆசிரியர் முன்னுரையில் எழுதியிருந்தார். நாவலின் பாதிவரை படித்தபோது கோட்சேவாதிகள் மகிழ்வுடன் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகம் ஏற்படுத்திக்கொடுத்துவிட்டாரோ என்று தோன்றியது. (நான் காந்தியவாதியாகவிருந்தால் அவரிடம் சண்டை போட்டிருக்கக்கூடும்). ஆனால் அந்த எண்ணம் முழுவதையும் படித்து முடித்தபோது அகன்றுபோயிற்று. தக்கர் பாபாவுக்கும் காந்திக்கும் இடையே நடந்த உரையாடலும், அதற்கடுத்து வந்த மநுவுடனான உரையாடலும் மிக முக்கிய ஒன்று. நாவலின் சத்தான பகுதியென்றால் இந்த உரையாடல்களைத்தான் சொல்ல வேண்டும்.
வாசகர்களின் குரலாய் இருவரிடமும் தக்கர் பாபா கேள்விகளை முன்வைப்பதுபோலவே இருந்தது. தனது பேத்தியின் நிர்வாணநிலையில் படுக்கையைப் பகிர்ந்துகொள்வது மிருகத்தனமான காமத்தின் தேவையை ஒட்டி அல்ல. சரியான அறம்சார்ந்த காரணங்களுக்காகத்தான் என்கிறார் காந்தி. அதன் உண்மைத்தன்மையை தக்கர் பாபாவுக்கு மநு அளிக்கும் பதில்களிலிருந்து பூர்ணத்துவத்தோடு உணர முடிகிறது. காந்தி அப்பழுக்கற்றவர், தூய்மையானர், கள்ளமில்லாதவர், காமவயப்படாதவர் என்பதற்கு மநுவே சாட்சியமாகிறாள். பிரம்மச்சரியப் பிரிசோதனை குறித்து காந்திமீது சேற்றைவாரி இரைப்பவர்களுக்கு மநு அவர்மீது சிறிய கறைகூட படிந்துவிடாத அளவிற்கு கேடயமாக இருந்து பாதுகாக்கிறாள். இந்தவிடயத்தில் காந்தி மநுவிற்கு கடன்பட்டிருக்கிறார்.
இருவருடனான உரையாடலிலும் பாபாவின் கையே ஓங்கி இருக்கிறது. அப்போது காந்தியின் பேச்சுகள் சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும் வகையிலும் இருக்கின்றன. அவரது பிந்தைய பேச்சுகளில் ஓரிடத்தில் முரண்படவும் செய்கிறது. தக்கரிடம் தான் இந்த பரிசோதனையில் மனத் தூய்மையற்றிருந்தால், கொடூர மரணத்தைச் சந்திப்பேன்" என்கிறார். அடுத்து பிர்லா இல்லத்திற்கு வந்தபின், பிரார்த்தனை கூட்டமொன்றில், "ஒரு மோசமான குண்டுவெடிப்பு நிகழ்ந்து அல்லது யாரோ ஒருவரால் சுடப்பட்டு, வெற்று மார்பில் தோட்டாக்கள் வாங்கி, ராமனின் பெயரை உச்சரித்தபடி மரணித்தால்தான், நீங்கள் என்னை உண்மையான மகாத்மா என்று சொல்ல வேண்டும்" என்கிறார். இரண்டையும் வேறுவேறு தளத்தில் அணுகி பேசியிருக்கிறார்தான். அவரது இறுதி முடிவோடு அவரது பேச்சை ஒப்பிட்டு அவர் மகாத்மாதான், ஆனால் பிரம்மச்சரியப் பரிசோதனையில் தோற்றுவிட்டார் என்றுபேச ஒருகூட்டம் இல்லாமலிருக்காது.
பழங்குடிகளின், ஹரிஜனங்களின் வாழ்க்கையைச் சீராக்க தக்கர் பாபா முயன்றுகொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, காந்தி, "அதை சரியாகப் புரிந்துகொண்டு எத்தனை ஆதிக்கச்சாதி மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்? மாற்றுக் கருத்துகளும் எதிர்ப்புகளும் இருக்கிறது என்பதற்காக நீங்கள் அதை கைவிட்டுவிட்டீர்களா? என்று கேட்கிறார். தனது பரிசோதனையோடு ஒப்பிட்டு இதைக் கேட்கிறார். பாபாவைப்போல எனக்கும் அந்த ஒப்பீடு தவறானதாகத்தான் தெரிகிறது. பரிசோதனையில் வென்றால், ஜின்னாவின் மனதைக்கூட மாற்ற முடியும் என காந்தி நம்புவது ஏற்க முடியாததாய் இருக்கிறது. யாகம் செய்தால் மழைவரும் என்பதை இப்போது யாராவது ஏற்பார்களா?
தக்கர் பாபாவுக்கும் மநுவுக்குமான உரையாடலில் இறுதி பகுதியில் மநு குழம்புகிறாள். காந்தி தன்பரிசோதனைமீது அதீத தன்னம்பிக்கையும் மயக்கத்தையும் கொண்டு விளைவுகளை யோசிக்காது செய்வதாய்ச் சொல்லும்போது மநு பயம்கொள்கிறாள். மனமுடைகிறாள். இதுகுறித்து காந்தியே மநுவிடம் பேசி அவளது மனோபலத்தை அதிகரித்திருக்க வேண்டும். காந்தி யாகத்திற்கு ஒருவரைத் தேர்வுசெய்யும் முறையிலிருக்கும் பலவீனமாக இது தெரிகிறது. இறுதியாக மநு காந்தியிடம் பரிசோதனையை நிறுத்தச் சொல்கிறாள். காந்தியும் சம்மதிக்கிறார்.
பின்பு காந்தி, தான் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை கைவிட்டதால்தான் மக்களின் மனதை மாற்றும் சக்தி தனக்கு இல்லாமல் போயிற்று என்று வருந்துகிறார். இவ்வாறு துக்கவயப்பட்டு பேசிதான், காந்தி மீண்டும் பரிசோதனைக்கு சம்மதிக்க வைக்கிறார். மநு மறுப்பேதும் சொல்லாது காந்தி மீதுகொண்ட பற்றால், பேரன்பால் சம்மதிக்கிறாள்.
பரிசோதனைக்கு உட்படுதப்பட்ட எந்தவொரு பெண்ணிடமும் காந்தி தனது உன்னத நோக்கம் குறித்தான விளக்கத்தை அறிவார்ந்த ரீதியில் கடத்தவில்லை என்பது தெரிகிறது. தகுதியின் அடிப்படையில்கூட ஆட்களை தேர்வு செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால், பரிசோதனையில் பங்கேற்ற சுஷீலா, "என்தோல் உங்களுக்குப் பழகி புளித்துப் போய்விட்டது. புதுத்தோல் கேட்கிறது, அதுவும் 17,18 வயது புதுத்தோல். கசக்குமா?" என்று அந்தவொரு இரவில் கேட்டிருக்கமாட்டார். அப்போது காந்தி தலையில் அடித்துக்கொள்கிறார். அழுகிறார்.
மறுநாள் கூட்டத்தில், "குழந்தைகள் தவறு செய்கையில் பெரியவர்கள் தங்களைத் தாங்களே தண்டித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் வளர்ப்பு அவர்களுடையது" என்கிறார்.
அப்போதுமட்டும் அவர் மகாத்மாவாகத் தெரிகிறார்.
காந்தி தன்னிடம் முறையான சம்மதம் வாங்காததை மநு, "பிறந்த சிசுவிடம் சொல்லி சம்மதம் கேட்டா தாய் அதற்கு முலையூட்டுகிறாள்?" என்று பாபாவிற்கு புரிய வைக்கிறாள். பரிசோதனையில் பங்கேற்ற மற்றவர்களுக்கு இத்தகைய புரிதல் இல்லை என்பதுதான் சிக்கல். இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர் காந்தி ஒருவரே. மநு தன்னை செயப்படுபொருளாகக் கருதுகிறாள். ஆபா விருப்பமின்றி அதில் கலந்துகொண்ட போது, தன்னை பரிசோதனை எலியாக நினைத்தால், அது வதையில்தான் வரும். அதற்கான தார்மீகப் பொறுப்பையும் காந்திதான் ஏற்றாக வேண்டும். காந்திமீது குறைபடக்கூடிய இடங்கள் இவை.
பரிசோதனைகளில் பங்கேற்க முறையான சம்மதத்தை காந்தி வாங்கினாரா என மநுவிடம் கேட்பதற்கு பதிலாக தக்கர் பாபா அந்த கேள்வியை காந்தியிடமே கேட்டிருக்க வேண்டும். மநுவிடம் கேட்ட பலகேள்விகளை அவர் காந்தியிடம்தான் கேட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பிரம்மச்சிரியத்தை காந்தி அதீதமாய் நம்புவதென்பது மெய்ஞான அறிவா? அல்லது மூடநம்பிக்கையா? அல்லது மனநோயா? என்பதான விவாதங்கள் ஒருபுறமிருந்தாலும், அவரது நோக்கம் போற்றுதலுக்குரியது. அதை நிறைவேற்றிக்கொள்ள அவர் பிடிவாத குணத்தோடும் சர்வதிகார மனநிலையோடும் இருந்திருக்கிறார்.
மநுவை ஒருதலையாகக் காதலிக்கும் பியாரேலால் பரிதாபத்திற்குரியவராகத் தெரிகிறார். "ஆலமர நிழலில் வேறெந்த மரமும் முளைக்காது போவது போல காந்தியின் அருகிலிருக்கும் எந்த ஆணும் தனக்குரிய பெண்ணை அடைய முடியாது" என்று வருந்துகிறார். ஷா-கஞ்ச்சன், ஜெய்பிரகாஷ்-பிரபாவதி, தேசாய்-சுஷீலா, கநு-ஆபா என பெரிய பட்டியலிடுகிறார். காந்தியின் பிரம்மச்சரிய கொள்கைகளால் பாதிக்கப்பட்ட லௌகீகவாதிகள்! இவ்விசயத்தில் காந்தியிடம் ஒருவித சுயநலமும் குருவிற்கான கண்டிப்பும் இருக்கிறது. அவற்றை சரியாகப் பிரித்துப் பார்ப்பது கடினம்.
இந்நாவல் காந்தி மேற்கொண்ட பிரம்மச்சரியப் பரிசோதனைகளைப் புனிதப்படுத்தவுமில்லை. கீழ்மைப்படுத்தவுமில்லை. மாறாக, நடந்தவைகளை கண்ணாடிபோல பிரதிபலிக்க முயன்றிருக்கிறது. சொந்த விருப்பு வெறுப்பின்றி, சார்பில்லாது, அந்நிகழ்வுகளை ஏறக்குறைய ஆவணப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவற்றைப் புனிதப்படுத்திக்கொள்வதும் கீழ்மைப்படுத்திக்கொள்வதும் அவரவர் விருப்பம்.
நாவலில் வர்ணனை என்பது மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், ஒவ்வொன்றும் ரத்தினம். குறைவு என்பதால்கூட ரத்தினமாகத் தெரிந்திருக்கலாம்.
மநுவின் உடலை, அதன் இளமையை, "விளைந்து வளைந்து நிற்கும் மக்காச்சோளம்" என்பதில் எப்படியோ வெளிபட்டுவிடுகிறார் முகநூல் சிஎஸ்கே. "காதலுக்குக் காதும் இல்லை" எனும்போது அவரை மிக எளிதாய் கண்டுகொள்ள முடிகிறது. தக்கர் பாபா மநுவிடம் ஓரிடத்தில், "ஆண்களின் மனதுக்கு வயதே ஆவதில்லை" என்பார். (அது உண்மையில் சிஎஸ்கே'வின் சொற்கள்; தக்கர் பாபாவினுடையது அல்ல). தத்துவம் மாதிரி இருந்தாலும், இதை அவர் முகநூலில் பதிவிட்டிருந்தால் HaHa ரியாக்சன்தான் கொடுத்திருப்பேன். இவை தவிர்த்து, முகநூல் சிஎஸ்கேவை நாவலில் நான் எங்கும் பார்க்கவில்லை.
"ராமர் இலங்கைக்கு பாலம் கட்டுகையில் சிறுகல்லைத் தூக்கிப்போடும் அணிற்பிள்ளை போன்றவள்" -
காந்திக்கு தான் என்னமாதிரியான உறவுநிலையில் இருக்கிறாள் என்பதை மநு இவ்வாறு ஆரம்பத்தில் உணர்கிறாள்.
ஆனால், இறுதித்தருவாயில் காந்தியே, "நீ என் வாழ்க்கைத்துணை ஆகிப்போனாய் மநு!" என உருகிப்போய்விடுகிறார். அவரது இறப்பிற்குப் பின், ஒரு கணத்தில் மநு தன்னை விதவையாக உணர்கிறாள்.
காந்தி, மநு இருவரிடையேயான உறவு அவ்வளவு அடர்த்தியாய் மாறியிருந்தது. "She is my soul-mate!" என காந்தி சொல்லும்போது எத்தனை பரிசுத்தம் வாய்ந்ததாய் அந்த உறவுநிலை இருந்திருக்கும்!
சென்றவாரம் தனியார் தொலைக்காட்சியொன்றில் 'ஹே-ராம்' பார்த்தேன். இதற்கு முன்பும் பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் காந்தி சுடப்படும் காட்சி வரும்போது, யாரோ இருவர் அவரைத் தாங்கிக்கொண்டு வருவதாய் நினைப்பதுண்டு. நாவல் படித்தபின் அவர்களை யாரோ என்பதாக கடந்துவிட முடியவில்லை.
படத்தில்வரும் மநு கண்ணாடி அணிந்திருந்தாள். ஆபாவும்தான். சந்தேகத்தின் பேரில், "காந்தி" (1982) திரைப்படத்தைப் பார்த்தேன். அதிலும் இருவரும் கண்ணாடி அணிந்திருந்தார்கள். எழுத்தாளர் இதுபற்றி சொல்லவே இல்லை! காந்தியைப்போல மநுவின் முகம் வெகுசனங்களுக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லையே! நாவலின் மூலமாகத்தான் முதல்முறையாக மநுவின் முகத்தை கற்பனைசெய்து வைத்திருந்தேன். சட்டென அந்தக் கற்பனைக்கு கண்ணாடி மாட்டுவது சிரமமாய்ப் போயிற்று. எழுத்தாளர் குறிப்பிடும் மநுவின் இளமைக்கான லட்சணங்களில் சிறுபகுதியை மட்டும் காந்தி படத்தில் பார்க்க முடிந்தது. ஹேராமில் இதைவிட குறைவுதான்.
காந்தி திரைப்படத்தில், அந்த காக்கி உடை அணிந்தவன் (கோட்ஷே என்று சொல்லக்கூடாதோ!) காந்தியை சுடும்போது, நாவலில் வருவதுபோல மநு தான் தாங்கியிருந்த நோட்டுப்புத்தகம் மற்றும் சில பொருட்களைத் தவறவிடுவாள். காந்தி கீழேவிழும்காட்சி இருக்காது. துப்பாக்கிச் சத்தத்தோடு நிறுத்திவிடுவார்கள்.
ஹேராமில் மநு நோட்டு வைத்திருக்கவில்லை. நாவலில், மநு கீழேவிழுந்த பொருட்களை எடுத்துவிட்டு நிமிரும்போது காந்தி சுடப்பட்டது கீழே சரிவதாகவும், ஆபா அவர் தலை கீழேவிழாமல் தாங்கிக்கொள்வதாகவும் எழுத்தாளர் கூறுகிறார். ஆனால், ஹேராமில் அவர் சுடப்படும்போது இருவரும் ஒதுங்கிக்கொள்கிறார்கள். காந்தி மல்லாக்க விழுகிறார். பின் அனைவரும் ஓடிவருவதாய்க் காட்டியிருக்ககிறார்கள்.
இறுதியாக..
காந்தி!
மகாத்மாவா என்றால், தெரியாது. ஆனால், மனிதத்தின்மீது பேரன்புகொண்ட பழமைவாதி. இதைத்தான் இந்நாவல் வழியே உணர முடிகிறது.
மநு!
நாடு முழுவதும் அறியப்பட்டு போற்றப்பட வேண்டியவள். கொண்டாடப்பட வேண்டியவள். இந்த நாட்டிற்கே தந்தையாகவிருக்கும் ஒருவர், ஒரே ஒருவளுக்கு மட்டும் அன்னையாக இருக்கிறாரென்றால், அவள் எவ்வளவு ஸ்பெஷல்! இறைத்தூதுவளாய் காந்தி நம்பும் அத்தகைய ஒருவளை தேவதையாய் ஜொலிக்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். மேலும், இதுவரை கண்டிராத ஒரு காந்தியை அடையாளம் காணவைக்கிறார்.
சென்றடையும் கைகளைப் பொறுத்து, காந்தியை போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் இந்நூல் துணைபுரிய வாய்புண்டு. அதற்கு வழிவகுக்கக் கூடும்.
காந்தியின் முழுமைகளை அறிய தமிழில் தவிர்க்க முடியாத நூல்களில் இதுவும் ஒன்றெனத் தோன்றுகிறது.

Comments
Post a Comment