காந்தாரா - பார்வை

கர்நாடக மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடி மக்களுள் ஒரு பிரிவினருடைய நில அரசியலையும், அதோடு தொடர்புடைய அவர்களின் தெய்வ வழிபாட்டு நம்பிக்கை பற்றியும் பேசுகிறது படம். அம்மக்கள் துளுவை தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களுடைய குலதெய்வம் "பஞ்சுருளி". பன்றிக் குருளை என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு வடிவம்தான் இந்த பஞ்சுருளி என்கிறார்கள்.  வனப்பகுதியில் வாழும் அவர்கள் பன்றியைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். 


நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாக  அப்போதிருந்த சிற்றரசனால் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை  தற்போதுள்ள (1970,1990களில்) அந்த சிற்றரச வாரிசுகளான பண்ணையார்களிடமிருந்து அம்மக்கள் பஞ்சுருளி தெய்வத்தின் துணையோடு

எப்படி காப்பாற்றிக்கொள்கிறார்கள் என்பதே கதைக்கான களம். முதல் 20 நிமிடம் வரை மிக நன்றாக நகர்ந்து, பின் மெதுமெதுவாய் முற்பாதிவரை தொய்வடைய தொடங்குகிறது 

திரைக்கதை. திராபையான காட்சி கோர்ப்புகளாக Commercial entertainer நோக்கில் Interval வரை கொண்டுபோயிருக்கிறார்கள். பிற்பாதியில் மீண்டும் மெல்ல சூடுபிடித்து இறுக்கமான காட்சிகளோடு க்ளைமாக்ஸ் முடிகிறது. முன்பகுதி திரைக்கதையில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவும் இசையும் கதைக்கு வலுவாக இருக்கின்றன.

மதம் அல்லது கலாச்சாரம் சார்ந்த பழமைவாத கருத்துக்களை எவ்வாறெல்லாம் தந்திரமாக கலை வடிவத்தில் சொல்லி மக்களை ரசிக்க வைக்கவும் ஆக்கிரமிக்கவும் முடியும் என்பதற்கு இப்படம் நல்ல சான்று.

பழங்குடி மக்ககளுக்கு இந்த Reserved forest அதிகாரிகள் எல்லோருமே உற்ற தோழர்களாக இருப்பார்கள் என்பது மாதியான காட்சி சித்தரிப்புகளை இப்படி சினிமாக்களில் மட்டும் வேண்டுமானால் பார்த்து ரசித்துக்கொள்ளலாம். இயக்குனரின் வலதுசாரித்தனம் வெளிப்பட்டுவிடும் இடம் இது.

வராஹ ரூபம் பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் அது சொல்லிநிற்கும் திரிபுவாதத்தில் இந்துமத கலாச்சாரமே ஓங்கி நிற்கிறது. 

காடுகளை வாழ்விடமாக கொண்டு வாழும் மக்களுக்கு அங்கு பன்றிகளின் இருப்பும் தேவையும் அவர்களுக்கு அவசியமாகிறது. விவசாயிகளுக்கு மண்புழு எப்படி தோழனோ அதுபோல பன்றி இவர்களுக்கு. அதனால் அதையே தெய்வமாக வழிபடத் தொடங்குகிறார்கள். அப்படியான ஒரு பழங்குடி வழிபாட்டை இறுதியாக விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ மூர்த்தியாக திரித்து முடித்திருக்கிறார்கள். 

தொல்குடிகளின் வரலாறும் தெய்வங்களும் பார்ப்பனியத்தால் அப்பட்டமாக திருடப்பட்டிருக்கின்றன என்பதற்கிருக்கும் ஏராள சாட்சிகளுள் பஞ்சுருளியும் ஒன்றாகியிருக்கிறது.

தேவர்மகன் திரைப்படம் வெளிவந்தபோது முற்போக்குவாத கருத்துகள் பேசுவதாய் நம்பவைக்கப்பட்டு, பின் அது சாதியுணர்வை வளர்க்க எப்படி இன்னமும் உதவுகிறதோ, வேதம் புதிது திரைப்படம் சாதியொழிப்பு பேசுவதாய் விதந்தோதப்பட்டு, பின்னர் அது எப்படி பார்ப்பனவாத வர்ணாஸரமத்திற்கு இன்னமும் துணைநிற்கிறதோ, அதுபோலவே காந்தாரா திரைப்படமும் பழங்குடிகளின் உரிமையையும் , அவர்களுடைய கலாச்சார அடையாளத்தையும் பேசுவதாய் நம்பவைக்கப்பட்டு, இனிவரும் காலத்தில் பார்ப்பனிய இந்துத்துவத்திற்கு வலுசேர்த்து நிற்கப் போகிறது.

Comments

Popular posts from this blog

லதீபா - சிறுகதை