சந்தியா காலம்

                                                 1                                  

சரியாகச் சொன்னால் பூந்தமல்லியிலிருந்து  ஸ்ரீபெரும்புதூருக்கு அந்த வளைவு வழியாகத்தான் உள்நுழைய முடியும். அதுவொரு முச்சந்தி வளைவு .

நைட் ஷிப்ட் செல்ல கம்பெனி வேனுக்காகக் காத்துக்கொண்டிருந்த பவித்ராவை தனியார் லோடு வண்டி ஒன்று மோதித் தள்ளியதும், மனிதநேயம் சிறிதும் இல்லாதவனாய் அந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதும், ரத்த வெள்ளத்தில் அவள் கிடந்து தவித்ததும் அந்த முச்சந்தி வளைவில்தான்.

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவளை, கழுத்தில் மாட்டியிருந்த ஐடி கார்டு அவள் யாரென்று அடையாளம் காட்டியதில் உரியவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. செகண்ட் ஷிப்ட்பில் இருந்த கீர்த்தனாவுக்கு விஷயம் தெரிந்ததும் மருத்துவமனைக்குள் இருந்தாள். ஐசியூ அறை முகப்பில் போடப்பட்டிருந்த சேரொன்றில் அமர்ந்தபடி நிவாஸுக்கு மெசேஜ் டைப் செய்துகொண்டிருந்தாள். பதட்டமும் பயமும் கொண்ட மிகைவுணர்ச்சி அவளைப் படுத்தியது. எதிர்மறை சிந்தனை வந்து தொண்டையை அடைக்கும்போது அழவேண்டும் என்றிருந்தது.    

ஐசியூவில் கிடத்தப்பட்டிருக்கும் பவித்ராவின் அறை கதவு திறந்து மூடும் போதெல்லாம் மனம் விம்மிப் புடைத்து, அவளை அழு என்றது. அழுதால் ஆறுதல் வார்த்தை கொண்டு தேற்ற ஒருவரும் இல்லையே என்ற நினைப்பு, 'அழாதே அடக்கிக்கொள்' என்றது.

சேரில் அமர்ந்துகொண்டு வெளிப்புற வராண்டாவை அவள் யாருடைய வருகைக்காகவோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். பவித்ராவுக்கு எதுவும் ஆகாது என்ற நல்ல மாதிரியான நம்பிக்கையை உருவாக்க முயன்று அதில் தோற்றுப் போய்க்கொண்டிருந்தாள். ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற எண்ணத்தை அவளை மீறி மனம் உள்வாங்கிக் கொண்டிருந்தது. இந்தத் துக்கமும் பயமும் அவளுக்குப் புதிதாக இருந்தது.

ஸ்டீல்லேண்ட் இந்தியா நிறுவனத்துக்கு கேம்பஸ் மூலமாக வந்திருந்த இந்த ஆறுமாத காலத்தில் கீர்த்தனாவுக்கு பெரிதளவில் பயமும் துக்கமும் நேராமல் பார்த்துக்கொண்டவள் பவித்ரா. படிப்பிலும் வேலையிலும் பவித்ராவுக்கு கீர்த்தனா இரண்டு வருடம் ஜூனியர். கல்லூரி முடித்துப் புதிதாய் வேலைக்கு வந்தவளை தன் 'ரூம்மேட்'டாக்கி, கரிசனத்தோடு பார்த்துக்கொண்டவள் பவித்ரா. ஹெச்ஆர், புரடெக்ஷன் மேனேஜர், ஷிப்ட் இன்ச்சார்ஜ் ஆகியோரிடம் நடந்துகொள்ளும் முறை, சக ஆபரேட்டர்களை, ஹெல்பர்களை லாவகமாகக் கையாளும் விதம் போன்றவற்றை தான் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலமாக அவளுக்குத் தெளிவுபடுத்தியிருந்தாள். இரண்டு வருட ஜூனியர் என்கிற பாகுபாடின்றி, தன்னைச் சகதோழியாக அவள் ஏற்றிருந்தாள் என்பதை அவளிடம் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே கீர்த்தனா புரிந்துகொண்டு விட்டாள். இந்த விபத்து தன்னைப் பாதித்த விதத்தை, அதனால் வந்த பரிதவிப்பைப் பார்க்கும்போது பவித்ரா எவ்வளவு தூரம் தன்னுள் நெருங்கி வந்திருக்கிறாள் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்.

நடுநிசியில் வெறிச்சோடிய வராண்டாவைப் பார்ப்பதற்குத் திகிலாக இருந்தது அவளுக்கு. தூரத்திலிருந்து யாரோ வருவதுபோல் தெரிந்தது. அந்த நபர் தன்னை நெருங்கி வரும் தருவாயில் நிவாஸுக்குரிய நடை தென்பட்டதும் அவன்தான் என்று கண்டுகொண்டாள்.

அவனைப் பார்த்ததும் தான் அழுவதற்கான சரியான சந்தர்ப்பத்தைத் தொட்டுவிட்டதாக நினைத்து மனமுடைய தயாரானாள்.

"தனியாவா இருக்க?"

"செகண்ட் ஷிப்ட் ஆட்கள் எல்லாம் பார்த்துட்டு காலையில் வர்றதா சொல்லிட்டுப் போயிருக்காங்க. ஐசியூல இருக்கா. ஒருத்தரையும் உள்ள விடல." என்றபடி தேம்பினாள். 

நிவாஸ் அவளை அழாதே என்றான். 

"வேன்ல வரப்ப ஸ்டாப்ல அவ அடிபட்ட இடத்தப் பார்த்தேன். ரொம்ப ரத்தம் போயிருந்தது. தலையில நல்ல அடியாம். சீரியஸின்றாங்க.." எனச் சொல்லிக்கொண்டு கூடுதலாக அழுதாள். இவ்வளவு அழுவோம் என்று அவள் நினைக்கவே இல்லை. 

நிவாஸுக்கும் கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது. சாதுரியமாக மறைக்க முயன்றான். ஒருவராவது மனதிடத்துடன் இருக்க வேண்டும், இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என நினைத்தான்.

**

கீர்த்தனா நிவாஸுடைய ஷிப்ட்டில்தான் டிரெய்னியாக வந்து சேர்ந்தாள். பார்த்ததும் வசீகரிக்கும் தோற்றம் அவனுக்குக் கிடையாது. முதல் அறிமுகத்திலேயே நம்பகத்தன்மையான பேச்சோ, பாவனையோ கிடையாது. புரடெக்ஷன் மேனேஜர் செந்தில் கீர்த்தனாவை நிவாஸிடம் அறிமுகப்படுத்தி லைனில் விட்டுச் சென்றதும், கீர்த்தனா அவனையும் மெஷினையுமே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

இண்டஸ்ட்ரியல் விசிட்டில் ஓரிரு கம்பெனிகளைப் பார்த்தவள்தான். அவற்றைவிட தான் வந்திருக்கும் இடம் கூடுதல் பிரம்மாண்டமாய்த் தெரிந்தது. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கோட், ஹெல்மெட், இயர்பாட் போட்டிருப்பது பார்த்து அவளுக்குப் படபடப்பாகிவிட்டது. சிலிட்டர் மெஷின்களின் ராட்சச சத்தங்கள், இதுவரை நுகர்ந்திடாத கூலண்ட் ஆயில் வாசனை, கிரேன் அதிர்வுகள், ஹைட்ராலிக் மோட்டார்களின் கூச்சல்கள் எல்லாம் அவளை ஏதோ பண்ணின.

நிவாஸை மறுபடியும் பார்த்தாள். கல்லூரியில் பழகிய எந்தவொரு ஆணின் சாயலிலுமே அவன் இல்லை என நினைத்தாள். அதனாலேயே ஒரு பயம். ஹைட்ராலிக் பிரஷர் மூலம் அவ்வளவு அலட்சியமாய் ராட்சச எந்திரங்களை வேலை வாங்குவது அவளுக்கு வியப்பாக இருந்தது. 

மெஷினை இயக்கிக்கொண்டே நிவாஸ் அவளை விசாரித்தான்.

"என்ன டிபார்ட்மெண்ட்?"

"டிப்ளமோ ட்ரிபிள் ஈ."

"ட்ரிபிள் ஈ படிச்சதுங்கலாம் சோம்பேறிங்களாதான் இருக்குதுங்க!"

நிவாஸ் அருகிலிருந்த சப்போர்ட் ஆப்ரேட்டர் சௌந்தர் சிரித்தான். பவித்ராவை மனதில் வைத்து நிவாஸ் அப்படிச் சொன்னதாக அவனுக்குப்பட்டது.

கீர்த்தனா கண்களைத் தாழ்த்திக்கொண்டாள். அவன் ட்ரிபிள் ஈ இல்லையென்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.

"எவ்ளோ பர்சண்டேஜ்?"

"தொண்ணூத்தி ஆறு."  

"அப்புறம் ஏன் இங்க வந்த? இன்ஜினியரிங் பண்ணலையா?

அவள் இல்லை என்பதாகத் தலையாட்டினாள். முன்பின் பழக்கமில்லாதவன் தன்னை ஒருமையில் அழைப்பது அவளுக்கு மரியாதை குறைவாகப்பட்டது.

சேஃப்டி இன்சார்ஜ பார்த்தாச்சா என்று கேட்டதற்கு ஆமாம் என்றாள். "கோட், ஷூ, ஹெல்மெட் எதுவும் இல்லாம இருக்க?" என்று கேட்டான்.

"எதுவும் தரலையே.."

"போய் வாங்கிட்டு வா.. கேட்டாதான் தருவாங்க."

"எங்கக் கேக்கணும்?"

"சேஃப்டிகிட்டதான்."

"இப்போ எங்க இருப்பாரு?" என்று தயங்கினாள்.

சப்போர்ட் ஆபரேட்டர் சௌந்தரிடம் மெஷினைக் கொடுத்துவிட்டு அவளை அழைத்தான். கம்பெனியில் இருக்கும் ஒவ்வொரு புரடெக்ஷன் செக்ஷனுக்கும் கூட்டிச்சென்று மெஷின்கள் 'ரன்'னாகும் விதம் பற்றிச் சொன்னான்.

"ஹெச்ஆர் சிலிட்டர், சிஆர் சிலிட்டர்ன்னு இங்க மொத்தம் அஞ்சு செக்ஷன் இருக்கு. ஒவ்வொன்னையும் 'லைன்'னுதான் சொல்லணும். நாம இருக்கிறது 'HR Slitter Line' . சிலிட்டர் மெஷின் பத்தி ஏதாவது தெரியுமா?

"தியரியா படிச்சிருக்கேன்."

"டிப்ளமோல சிலிட்டர் மெஷின்லாம் வருதா என்ன?"

"கூகுள்ல தேடனேன். கம்பெனி பத்தித் தெரிஞ்சுக்க."

"இங்க எப்படி வந்த?"

"கேம்பஸ் மூலமா."

"என்ன ஊர் நீ?"

"நாகர்கோவில்"

"இந்தக் கம்பெனிக்கு ஆள் எடுக்க அவ்வளவு தூரம் வராங்களா?" என்று கேட்டவனை வியந்து பார்த்தாள்.

சேஃப்டி இன்ச்சார்ஜிடம் ஷூ, ஹெல்மெட், கோட் ஆகியவற்றை வாங்கி அவளுக்கு மாட்டிவிட்டு, தன்னருகில் பொம்மைபோல் நிறுத்திக்கொண்டுவிட்டான் அவன்.

"அப்படியே லைன சுத்திப்பாத்துட்டு வா." என்றான்.

இருப்பதிலேயே இந்த ஹெச்ஆர் சிலிட்டர் லைன்தான் பெரியதாகப்பட்டது அவளுக்கு. ஒவ்வொரு காயிலின் எடையுமே தோராயமாக இருபது டன் வரும். சுருள் சுருளாக இருக்கும் இரும்பிலான காயில்களை கஸ்டமர் கம்பெனிகளின் தேவைக்கு, அளவிற்கு, வடிவத்திற்கு ஏற்ப 'கட்' செய்து தருவதுதான் வேலை. 

குடோன் பகுதியில் இருக்கும் காயில்களை மெஷினுக்கு எடுத்துவர கிரேன் ஆபரேட்டர் என்று ஒருவர். கஸ்டமர்களின் தேவைகளுக்கு ஏற்ப காயிலை கட் செய்ய நைஃப் பிளேடுகள் மூலமாக 'செட்டிங்' போட வேண்டும். அதற்கு ஹெல்பர்கள் இருவர். சப்போர்ட் ஆபரேட்டர் ஒருவர் அல்லது இருவர் இருப்பர். இவர்களைத் தவிர்த்து மெயின் ஆபரேட்டர் முக்கியமானவர். 

ஒரு மெஷினை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை ஹைட்ராலிக் பிரஷர் மூலமாக கண்ட்ரோல் செய்ய தனித்தனியாக மூன்றுக்கும் பேனல் போர்டு அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பேனல் போர்டுக்கும் பத்து மீட்டர் இடைவெளி இருந்தது. 

எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, "இதெல்லாம் ஒரே மெஷினா?" என்று அப்பாவியாக நிவாஸிடம் கேட்டாள் கீர்த்தனா. 

"கூகுள் சொல்லலயா இதயெல்லாம்?" 

"ஒவ்வொரு பார்ட்ஸும் தூர தூரமா இருக்கு!"

"நடக்க முடியலையா? ரிக்ஷா வண்டி ஒன்னு வச்சுக்கலாமா போயிட்டு வர?"

அவள் பேசாது இமைதாழ்த்தினாள். நிவாஸ் மனதில் சிரித்துக்கொண்டான்.

**

ஹாஸ்டலில் இருக்கும்போது பவித்ராவிடம் நிவாஸ் பற்றி கீர்த்தனா கேட்டாள். 

"வாய் ஜாஸ்தி. ஆனா அவன் ஷிப்ட்லதான் ஜாலியா இருக்க முடியும். கொஞ்சம் சுடுசொல்லா எதையாவது பேசி வச்சிருவான். பொருட்டா எடுத்துக்காத." என்றாள்.

"உங்க ஷிப்ட்டுக்கு என்ன மாத்திக்கறீங்களா?"

"எடுத்த உடனே அப்படி எல்லாம் மாத்த முடியாது ஷெட்யூல்படிதான் போகணும். உனக்கு விஷயம் தெரியுது அப்படின்னு ஷிப்ட் இன்ச்சார்ஜ் நம்ப ஆரம்பிச்சுட்டா  கண்டுக்காம விட்டுருவாங்க. அப்புறம் மாறிமாறிப் போய்க்கலாம். கணக்குக்கு மூனு ஆபரேட்டர் இருந்தா போதும் ஒரு ஷிப்ட்டுக்கு. கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் நமக்குள்ளேயே பேசி மாத்திக்கலாம். மூனு பேர்ல யாரு மெயின் ஆபரேட்டர்ன்னு நமக்குள்ளேயே பேசி முடிவு பண்ணிக்கலாம். ஷிப்ட் இன்ச்சார்ஜ் இதுல தலையிட மாட்டாங்க."

"...."

"அப்புறம் மெயின் ஆபரேட்டரா இருக்கிறது ஒரு சுமை. எல்லாமே நம்ம தலையில விடியும். சப்போர்ட் ஆபரேட்டர யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. ஏதாவது பிரச்சனைனா மெயின் ஆபரேட்டர்தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லி ஆகணும். ஆள் பற்றாக்குறையால இப்போ மெயின் ஆபரேட்டர் வேலையைப் பார்த்துகிட்டு இருக்கேன். நானே கொஞ்சநாள்ல நிவாஸ் ஷிப்ட்டுக்கு மாறலாம்னு இருக்கேன்."  

"ஹெச்ஆர் சிலிட்டர்லயிருந்து வேற லைனுக்கு மாறிக்கவா?"

"ஹே... அந்த லைன்ல ஆர்டர் கம்மி.. நைட் ஷிப்ட்ல பெரும்பாலும் வேலை இருக்காது. பாதி நேரம் தூங்கிடுவோம். மத்த லைன்னா இடுப்பொடையும். இப்ப உனக்கு என்ன பிரச்சன?"

"நிவாஸ்..." என்று அவன்மீதிருந்த ஒவ்வாமையால் இழுத்தாள்.

"என்ன மெரட்றானா? நம்ம பையன்தான். நான் பாத்துக்கறேன் விடு. அதுமட்டுமில்லாம நிவாஸ் மெக்கானிக்கல் க்ரூப். மெஷினைப் பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கான். ஈகோ இல்லாம எல்லாத்தயும் சொல்லித்தருவான். அவன்கூட இருந்தா நிறைய கத்துக்கலாம்."

காரணம் இல்லாமல் அவள் முகம் வாடுவதைப் புரிந்துகொண்டு, "சரி அதவிடு கம்பெனிய சுத்திப் பாத்தியா? பசங்கலாம் எப்படி இருக்காங்க? யாரெல்லாம் உன்ன சைட் அடிச்சா? நீ யார சைட் அடிச்ச? என்று பேச்சை மாற்றினாள்.

கன்னத்தில் உராயும் மயிர்க்கற்றையை ஒருபுறமாக ஒதுக்கிக்கொண்டு கீர்த்தனா சிரித்தாள்.

"வெக்கப்பட்றீயா?"

உதட்டை அமுக்கிக்கொண்டு சிரிப்பை மறைக்க முயன்றாள்.

"உனக்கு முல்லைப்பூ மூஞ்சு.. காலேஜ்ல பசங்க தூக்கி வச்சு கொஞ்சிருப்பாங்களே?"

அவள் இல்லை என்பதாக மறுதலித்தாள்.

நெஜமாவா? ப்ரபோசல் எதுவும் வரலயா?

"இல்ல.. சரி அதென்ன முல்லைப்பூ?

"வர்ணிச்சது இல்லையா யாரும்? முல்லப்பூ.. அப்புறம் வாழப்பூன்னு.."

அடிப்பாவி என்பதுபோல் வாயில் கை வைத்துக்கொண்டாள் கீர்த்தனா.

"அழகு நம்பிக்கையத் தரும். கவர்ச்சி பெருமையத் தரும். உனக்கு அப்படி ஃபீலானது இல்லயா?"

"நிறத்துல ஒன்னும் இல்ல. அறிவுதான் எப்பவும் வசீகரிக்கும். இளமை போயிடும். திறமதான் வாழ்நாள் முழுக்கக் கூடவே இருக்கும்."

"சாபியோசெக்சுவலா நீ? சரி யாரையும் லவ் பண்ணலயா அப்போ?"

"வயசுகோளாறு செய்யற பொறுக்கித்தனம்தான் காதல். அதெல்லாம் பிடிக்காது." என்றாள் கீர்த்தனா.

இனி பேச்சை வளர்ப்பது நல்லதல்ல என்றுபட்டது பவித்ராவுக்கு.

**

பூந்தமல்லி ஹைவேயிலிருந்து பிரிந்து நிற்கும் அந்த முச்சந்தி வளைவிலிருந்து ஐம்பது மீட்டர் முன்நகர்ந்தால் ஒரு மண்சாலை குறுக்கிடும். அந்த மண்சாலை வழியே நூறு மீட்டர் நடந்தால் நிவாஸ் இருக்கும் மென்ஸ் ஹாஸ்டல். அதிலிருந்து இருநூறு மீட்டரில் பவித்ரா, கீர்த்தனா இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல். சிப்காட்டில் பணிபுரியும் நபர்களுக்கென  தாரை வார்க்கப்பட்டிருந்தன அந்த இரு ஹாஸ்டல்களும். மெஸ் ஒன்று இரண்டு ஹாஸ்டல்களுக்கும் நடுவில் உள்ளது. கம்பெனியில் சாப்பிடுவதைத் தவிர்த்த வேளைகளில் இங்குதான் எல்லோருக்கும் போஜனம். நிவாஸுக்கு இந்த மெஸ்ஸில் அக்கவுண்ட் இருக்கிறது. கையில் பணம் இல்லாது இருக்கும்போது மட்டும் இங்கு வருவான். லட்சுமி கடாட்சத்தோடு இருக்கும் நாட்களில் ஃபாஸ்ட் ஃபுட், தலப்பாகட்டி என்று போய்விடுவான்.

மெஸ்ஸில் மதியம் கீர்த்தனா சாப்பிட்டுவிட்டு முச்சந்தி வளைவுக்குச் செல்லும்போது நிவாஸ் தங்கியிருக்கும் விடுதியை ஒருமுறை பார்த்தாள். வெள்ளைத்தாடி தாத்தா ஒருவர் யாரிடமோ சத்தம்போட்டுப் பேசிக்கொண்டிருந்தார். நடந்து வந்து முச்சந்தி ஓரத்தில் நின்றுகொண்டாள். 

அந்த முச்சந்தி பொது நிறுத்தம் கிடையாது. சிப்காட் கம்பெனிகளின் வேன்கள், பஸ்கள் மட்டுமே நின்று செல்லும். ஒரகடம் சிப்காட்டில் ஒரு மூலையில் இருக்கும் ஸ்டீல்லேண்ட் இண்டியா கம்பெனிக்கு இரண்டு வேன்கள் இருக்கின்றன. ஒன்று ஸ்ரீபெரும்புதூர் வழியாக பூந்தமல்லிவரை செல்லும். மற்றொன்று வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம்வரை. வேனுக்காகக் காத்திருந்த போதுதான் வெயிலின் உக்கிரத்தை அவள் உணர்ந்தாள். 

அருகிலிருக்கும் காபி பாரிலிருந்து வெளிப்பட்டு அவளை நோக்கி வந்தான் நிவாஸ். முச்சந்தியை ஒட்டிநிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி கொடிக்கம்பத்தின் காரைத்திட்டில் வந்தமர்ந்தான். அதனருகே சிதிலமடைந்த மற்றொரு காரைத்திட்டு இருந்தது. ஹைவே சாலைக்குச் சேர்த்து அந்தக் காரைத்திட்டு போடப்பட்டிருந்தது. முன்பொரு முறை நடந்த விபத்தால் அப்படிச் சிதிலமடைந்திருந்தது. 

"ஏன் நிக்கற? வந்து உட்காரு." என்று தான் அமர்ந்திருந்த காரைத்திட்டின் ஒரு பகுதியை அவளுக்கு ஒதுக்கினான். கீர்த்தனா அவன் அருகில் வந்து நின்றுகொண்டாள். காரைத்திட்டில் கைவைத்து உட்காரச் சொல்லி செய்கை காண்பித்தான். அவள் வேண்டாம் என்பதாகத் தலையசைத்து மறுத்தாள். 

"வேன் வரவரைக்கும் நின்னுகிட்டுதான் இருக்கப் போறியா?" என்று கேட்டான். அவளை அருகே வரச்சொல்லி அவள் நிழல் தன்மீது படும்படி நிறுத்திக்கொண்டான். 

வெயில் தகதகத்தது. சாலையைக் கடக்கும் வண்டிகள் புழுதிக்காற்றை கீர்த்தனாவின் மேல் வீசிச் சென்றன. ஒருதரம் அவன் மொபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டான். ஏதோ நினைவுக்கு வந்தவன் சாலையின் இடபுறமிருக்கும் கருவேல மரங்களின் புதர்களுக்குள் சென்று மறைந்தான். புழுதிபடாமல் இருக்க சிதிலமடைந்த காரைத் திட்டத்தின் அருகே ஒதுங்கி நின்றுகொண்டாள். அப்போது அவள் கண்முன்னே கணப்பொழுதில் அந்தச் சம்பவம் நிகழ்ந்துபோனது. ஸ்டீல்லேண்ட் இண்டியா வேன் அவளைச் சட்டை செய்யாமல் கடந்துபோயிற்று. இத்தனைக்கும் அவள் வேறு எங்கும் வேடிக்கை பார்க்கவில்லை. வேன் தூரத்தில் வரும்போதே கண்கொண்டு பார்த்து, தன் அருகே வந்து அடங்கி நிற்கும் என்று எதிர்பார்த்தாள். தன்னைக் கண்டுகொள்ளாத சென்ற அலட்சியத்தை அவளால் ஏற்க முடியவில்லை. 

நிவாஸ் முட்புதரிலியிலிருந்து வெளிப்பட்டு அவள் அருகே வந்தான். பதபதப்புடன், "வேன் போயிடுச்சு!" என்றாள்.

"எங்க?"

"ஸ்ரீபெரும்புதூர்க்குள்ள!"

"நீ நிறுத்தலயா?"

"நிறுத்தனுமா? தெரியாதா அவுங்களுக்கு?"

"நீ புதுப்பொண்ணு.. உன்ன எல்லாருக்கும் தெரியுமா?" 

"நேத்துப் பார்த்திருப்பாங்களே?"

"டிரைவர்ஸ்லாம் அடிக்கடி மாறுவாங்க கைநீட்டி நிறுத்தத் தெரியாதா உனக்கு?"

"இப்போ என்ன பண்றது?"

"ரூம்க்குப் போய்ப் படுத்துத் தூங்கு."

கொஞ்சம் காட்டமாகத்தான் சொன்னான்.

"ஒருத்தர்னா பரவாயில்ல.. ஒரே லைன்ல ரெண்டு பேர் லீவ்னா பிரச்சனையாகிடும்."

"லீவ்லாம் வேண்டாம். பஸ்ல போயிடலாம்" என்றாள்.

"பஸ்ல போனா பாதி ஷிப்ட் முடிஞ்சிடும்." என்றவன், அவளைக் கூட்டிக்கொண்டு பூந்தமல்லி ஹைவே சாலையில் நின்றான். 

அதிவேகத்தில் விதவிதமாய்க் கடக்கும் லாரிகளைப் பரபரப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் ஒன்றை அடையாளம் கண்டுகொண்டு கைநீட்டி வழிமறித்தான். சாலையோரமாய் லாரி ஒதுங்கியது. டிரைவரிடம் பேசிவிட்டு வந்து லாரியின் இடதுபுற கதவைத் திறந்துவிட்டு அவளை ஏறச் சொன்னான். அவள் பிடிவாதமாய் மறுத்தாள். முகம் மிரட்சியாகி வெளுத்தது. அவள் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டு ஸ்டீல்லேண்ட் இண்டியா பக்கத்தில் இருக்கிற கம்பெனிக்குத்தான் இந்த லாரி செல்வதாகச் சொன்னான்.

"நான் லீவ்கூட எடுத்துக்கறேன். நீங்க வேணா போங்க. ஒருத்தர் லீவ் போட்டா பிரச்சன ஆகாதுல்ல?" என்றாள்.

"இன்னைக்கு லூகாஸ் டிவிஎஸ்க்கு காயில் ரன் பண்ணனும். அவன் ஆயிரத்தெட்டு நோட்ட சொல்லுவான். க்யூசி நாமதான் பாக்கணும். நீ இருந்தாதான் முடியும்." என்றான். அப்போதும் வம்பாய் மறுத்தாள்.

"பயப்படாத கீர்த்தனா.. டிரைவர் தெரிஞ்சவர்தான். ரொம்பநாள் பழக்கம். வேன் மிஸ் பண்ணிட்டா இப்படித்தான் அடிக்கடி போவேன்." என்றவனை, உன்னையே எனக்கு ரெண்டு நாளாதான் தெரியும் என்பதாய்ப் பார்த்துவிட்டு, "நான் ரூம்க்கே போரேன்" என்று இரண்டடி எடுத்து வைத்தவளை, ஒரு நிமிடம் இருக்கச் சொல்லி மீண்டும் டிரைவரிடம் ஓடினான். 

அவரிடமிருந்து வாங்கி வந்த 'பின்' செய்யப்பட்ட  பேப்பர்கள் சிலவற்றை அவளிடம் காண்பித்தான். இன்வாய்ஸ் பேப்பர்கள் அவை. லாரி ஸ்டில்லேண்ட் இண்டியா அருகிலிருக்கும் நிறுவனத்திற்குத்தான் செல்கிறதென்று அவை சொல்லின. அதன்பின்தான் அவள் லாரியில் ஏறச் சம்மதித்தாள்.

நடந்தவற்றை ரூமில் இருக்கும்போது பவித்ராவிடம் சொன்னாள் கீர்த்தனா. கேட்ட மாத்திரத்தில் கண்ணில் நீர்பொங்க சிரித்துத் தள்ளினாள் அவள். 

"எலும்பெடுத்தவன். ஹாஸ்டல்லயும் போமாட்டான். கம்பெனியிலயும் போமாட்டான். நாயிக்கு கரண்டு கம்பம்மாதிரி இவனுக்கு அந்தப் பொதரு.. பாத்ததும் ஒன்னுக்கு முட்டிக்கும்." என்றாள்.

**




அடுத்து வந்த வாரத்தில் நைட் ஷிப்ட்டுக்கு நிவாஸோடு மாற்றப்பட்டிருந்தாள் கீர்த்தனா. இதுவரையான நாட்களில் தனக்கு மெஷினைப் பற்றித் தெரிந்ததுவரை நிவாஸ் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். 

ஹூண்டாயிலிருந்து ஒரு காயில் மட்டும் ஆர்டர் வந்திருந்தது அன்று. காயிலை ரன் செய்து முடித்துவிட்டு கீர்த்தனாவை கேண்டீனுக்கு அழைத்துச் சென்றிருந்தான். கொஞ்ச நேரம் அங்கு உலாவிவிட்டு லைனுக்குக் கூட்டி வந்தான். லைன் வெறிச்சோடி இருந்தது. 

"ஆர்டர்ஸ் எதுவும் இல்ல. கிரேன் ஆபரேட்டர், ஹெல்பர் எல்லாம் தூங்கப் போயிட்டாங்க. நாமளும் தூங்கிடலாம்." என்றான். 

காயில்கள் அடுக்கவைக்கப்பட்டிருக்கும் குடோன் பகுதிக்கு அவளைக் கூட்டிவந்தான். அவனைப் பற்றிய சிறுபுரிதலும் இன்றி அவள் அவன் விருப்பத்தின் பக்கம் போய்க்கொண்டிருந்தாள். யாரும் வந்துவிட எளிதில் காரணம் கிடைத்து விடாத பகுதி அது. கம்பெனியில் சிசிடிவி கேமராவிலிருந்து தப்பித்திருக்கும் ஒருசில இடங்களில் இதுவும் ஒன்று. டன் கணக்கில் இருக்கும் எஃகு மற்றும் இரும்பிலான காயில்கள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

கீர்த்தனாவை ஒரு காயிலுக்கு அருகே கொண்டுசென்றான். பாதுகாப்பிற்கு அதிகப்படியான சாத்தியக்கூறுகளை அக்காயில் கொண்டிருப்பதை அறிந்த பின்பே அவன் அவளை அங்குக் கூட்டிச் சென்றான். 

"காயிலுக்குள்ள போய் உட்கார்ந்துக்கோ." என்றான் அவளைப் பார்த்து. கீர்த்தனா அவன் பேச்சைப் புரியாது பார்த்தாள். 

"தூங்குறதுக்கும் உனக்கு நான்தான் சொல்லிக் கொடுக்கணுமா?" என்றுவிட்டு, அவன் காயிலின் உள்வட்டத்திற்குள் புகுந்து, கைகால்களை மடக்கிக்கொண்டு காயிலோடு வட்ட வடிவத்திற்குத் தன்னுடலை உருமாற்றிக்கொண்டான். காயிலின் உள்விட்ட அளவு ஓர் ஆள் புகும் அளவிற்கு இருப்பது அப்போதுதான் அவள் புலனுக்கு எட்டியது. இதில்கூடப் படுத்துத் தூங்கலாம் என்பது எவன் புத்திக்கு வந்த யோசனை?

அவன் வெளியே வந்து கீர்த்தனாவை அப்படி காயிலுக்கு உள்ளே போகச் சொன்னான்.  அவள் தெளிவற்று, அரைகுறை யோசனையில் அவனைப் பார்த்தாள். 

போய்ப் படு என்று அவள் தலையைப் பிடித்து காயிலுக்குள் அமுக்க முயன்றான். ஒருகணம் திடுக்கிட்டுப்போய் அவனைப் பார்த்தாள். 

"ஷிப்ட் இன்ச்சார்ஜ் வருவாரே?"

"ஆர்டர் இல்லாத லைனுக்கு வரமாட்டாங்க. சீக்கிரம் போய்ப் படு. எனக்குத் தூக்கம் வருது." என்றான்.  

இனி தாமதித்தால் கைக்குழந்தையைத் தூக்கி வைப்பதுபோல தன்னைத் தூக்கி காயிலுக்குள் உட்கார வைத்துவிடுவான் என்றுபட்டது அவளுக்கு. அந்த விபரீதத்திற்கு வாய்ப்புத் தராமல் காயிலுக்குள் புகுந்து தன்னை இடுக்கிக்கொண்டாள்.  கருவில் குழந்தை படுத்துறங்குவது போல் அவள் அப்போது தெரிந்தாள். 

"இங்க யாரும் வர மாட்டாங்க. எந்தத் தொந்தரவும் இருக்காது. கண்ண மூடிக்கோ பத்து நிமிஷத்துல தூக்கம் வந்துரும். நான் கூலண்ட் ஆயில் டேங்க் பக்கத்துல படுத்துக்கறேன். அஞ்சு மணிக்கு எழுந்தா போதும். நீ முதல்ல எழுந்தா என்ன எழுப்பி விடு. நான் எழுந்தா உன்ன எழுப்பி விடறேன்" என்றுவிட்டு கூலண்ட் ஆயில் டேங்க் அருகே படுக்கச் சென்றான்.

இந்த இரவு அவளுக்குப் புதியதாக இருந்தது. திகைப்பாகவும் இருந்தது. இப்படி இன்னும் நாட்டில் எத்தனை கிறுக்குத்தனங்கள் இருக்கின்றன? எத்தனை வேடிக்கை மனிதர்கள் இருக்கிறார்கள்? 

சிறிதுநேரம் கண்களை மூடிப் பார்த்தாள். தூக்கம் என்பது துளியும் வரவில்லை. காயிலுக்குள் சிக்கியிருப்பது அவளுக்கு அசௌகர்யமாகப்பட்டது. பயமாகவும் இருந்தது. 

சிலிட்டர் மெஷினுக்கும் குடோன் பகுதிக்கும் இடையில் 'பேக்கிங் செக்ஷன்' இருந்தது. கட் செய்த காயில்களை கஸ்டமர்களுக்கு 'பேக்' செய்யும் இடம். அதன் கடை எல்லையிலிருந்த கூலண்ட் டேங்கருகே படுத்துக்கொண்டான் அவன். காயிலிலிருந்து வெளிவந்து கூலண்ட் டேங்க் அருகில் சென்று நிவாஸைப் பார்த்தாள். தூக்கம் என்பது அவனுக்கு மிகச் சீக்கிரத்தில் வரக்கூடியதாக இருந்தது. காயில் கவர் ஒன்றை படுக்கையாக்கி, மற்றோன்றை போர்வையாக்கி கள்ள தூக்கத்திற்கான குற்றவுணர்வு இல்லாதவனாய் இடம் அறியாது ஆழ்ந்து உறங்கியிருந்தான். 

கீர்த்தனா அவனருகில் இருக்கும் 'நைஃப் பாக்ஸ்'மீது உக்கார்ந்துகொண்டாள். மற்ற லைன்களில் இருந்தும் சத்தங்கள் பெரிதாக இல்லை. அங்குமே இப்படித்தான் தூங்கிக் கொண்டிருப்பார்களா என்ற யோசனை வந்தது. சிஆர் சிலிட்டரிலிருந்து மட்டும் சத்தம் கேட்பதாகத் தோன்றியது அவளுக்கு. புரடெக்ஷன் இல்லாத போது இப்படித் தூங்குவதற்குச் சுதந்திரம் கொடுக்கும் கம்பெனியை இப்போதுதான் அறிகிறாள். உடன்படித்த கிளாஸ்மேட்கள்கூட தங்கள் அனுபவத்தில் இப்படி ஒரு விபரத்தைத் சொன்னதில்லை. அல்லது தனக்கு மட்டுமே கிடைத்த கொடுப்பினையா இது என வியந்தாள். இந்நேரம் வீட்டில் பெற்றோர்கள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பார்கள். தம்பி தன்னுடைய பெட்டில் படுத்துக்கொண்டு சொகுசை அனுபவித்துக் கொண்டிருப்பான் என்று நினைத்தபோது கடுப்பு வந்தது.

சிறிதுநேரம் வெறுமனே பார்த்திருந்துவிட்டு,  கைகளுக்குக் கால் மூட்டுகளைக் கொடுத்து மடக்கிக்கொண்டு, நைஃப் பாக்ஸின் மேற்பரப்பில் தலை சாய்ந்தாள். எப்போது தூங்கினோம் என்பதே தெரியாதவளாய் கண் அயர்ந்தாள்.  

விழிப்புத் தட்டியபோது நிவாஸைப் பார்த்தாள். தன்னிலை மறந்தவனாய் கூலண்ட் டேங்கின் பைப் லைனைக் கட்டிக்கொண்டு கிடந்தான். வாட்ச்சை பார்த்துக்கொண்டாள். மணி ஐந்தை நெருங்கி இருந்தது.

கீர்த்தனா  அவனை எப்படி எழுப்புவது என்பதில் குழப்பம் கொண்டிருந்தாள். தன்னைவிட இரண்டு வயது சீனியர் பையனை வெறுமனே பெயர் சொல்லி அழைப்பதில் உள்ள சிரமத்தில் தவித்தாள். அவனருகில் சென்று நிவாஸ் என்றாள். அவனிடம் எந்தச் சலனமும் இல்லை. அவன் முதுகு பகுதியில் கைவைத்து, அவன் பேரைச் சொல்லி முன்பைவிட அழுத்தமாகக் கூப்பிட்ட போதும் எந்த முன்னேற்றமும் இல்லை. கீர்த்தனா அவனது கோட்டை கெட்டியாகப் பிடித்திழுத்து அவன் பெயரை மீண்டும் ஒருமுறை சொல்லிக் கூப்பிட்டபோது, தன் கழுத்தை யாரோ நெரிப்பதிலிருந்து விடுபடும் உணர்வில் பயந்து எழுந்தான். 

"மணி அஞ்சாச்சு!' என்றாள். யார் நீ உன்னை இதற்கு முன்பு பார்த்தது இல்லையே என்பதுபோல் அவளைப் பார்த்துவிட்டு, தனது 'பெட்ஷீட்டை' சரிசெய்து கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டான். முன்பைவிடக் கூடுதலாக அந்தப் பெட்ஷீட்டால் தன் உடலை மூடிக்கொண்டான்.

கீர்த்தனா வெறுமனே லைனில் கொஞ்சம் உலாத்தத் தொடங்கினாள். சரியாக கால் மணி நேரம் கழித்து அவனை மற்றொரு முறை உலுக்கினாள். இந்த முறை அவனுடைய சாதுதன்மை பறிபோயிருந்தது. "புதுப்பொண்ணுகூட பார்க்கமாட்டேன். அடிச்சிடுவேன் போயிடு." என்று அதட்டிவிட்டு மீண்டும் நித்திரை பழகினான். முன்பைவிட இப்போது கொஞ்சம் முன்னேற்றம். அவள் யாரென்று அடையாளம் அவனுக்குத் தெரிந்திருந்தது.   

நிவாஸ் எழுந்து வந்தபோது மணி ஆறைத் தொட்டிருந்தது. பேனல் போர்டு முன்பாக அமர்ந்திருந்தவர்களிடம் வந்து, "தூங்கலையா?" என்று கேட்டான். தூக்கம் வரல." என்றாள். 

தலைகலைந்து, கண்கள் சிவந்து, சரியான பிரக்ஞை அற்றவனாக இருந்தவனைப் பார்த்ததும் உள்ளுக்குள் சிரிப்பு வந்தது அவளுக்கு. 

"ஏன் எழுப்பி விடல?" என்று கேட்டான். அவள் திகைத்த திகைப்பிற்கு அளவில்லை. 

பேனல் போர்டு கீழிருக்கும் பெரிய டிராவை திறந்து ரிப்போர்ட் பேப்பரை எடுத்தான். டிராவில் சில ஹெல்மெட்களும் கோட்டுகளும் இருந்தன. "கோட்ட இங்கேயே கழட்டி வச்சிட்டுப் போயிட்டு. ரூமுக்கு எடுத்துட்டுப் போனின்னா மறந்துட்டு வந்துடுவ." என்றான். 

ரிப்போர்ட் ஷீட்டில் அன்றைய வேலைபாடுகள் பற்றி எழுதினான். காயில் எந்த நிறுவனத்திற்காக ரன் செய்யப்பட்டது, அதன் அளவு, எடை மற்றும் ரன் செய்யப்பட்ட நேரம் என அனைத்தும் அதில் அடங்கியிருந்ததன. மெயின் ஆபரேட்டர் இடத்தில் அவன் பெயரையும், சப்போர்ட் ஆபரேட்டர் இடத்தில் கீர்த்தனா பெயரையும் எழுதினான். 

"நாம வேலை செய்யறோம், செய்யாம இருக்கோம் அதுவேற.. இதுல என்ன எழுதறோம்ன்றதுதான் முக்கியம். கடைசியா இந்தப் பேப்பர்தான் பேசும். ஒவ்வொரு மாசமும் பெர்ஃபார்மன்ஸ் இத வச்சுதான் போடுவாங்க." என்று சொல்லிக்கொண்டு எழுதியவன் ஒருமுறை அவளைப் பார்த்துவிட்டு, "அன்னைக்கு நீ என்ன நம்பனியா பேப்பர நம்பனியா?" என்று கேட்டான். 

கீர்த்தனாவுக்குச் சுருக்கென்று இருந்தது. வேண்டுமென்றே குத்துகிறான் எனப்பட்டது. "ரிப்போர்ட் ஷீட் தீர்ந்திருச்சு. ஷிப்ட் இன்ச்சார்ஜ்கிட்ட கேட்டு வாங்கிவை." என்றான்.

வேனிலிருந்து இறங்கி ஹாஸ்டல் நோக்கி நடக்கும்போது, "ரெனால்ட் ரிசான்ல ஒரு இன்டர்வியூ இருக்கு. வரியா?" என்று கேட்டான்.  படித்து முடித்து ஒரு கம்பெனியில் சேர்ந்து இன்னும் முதல்மாத சம்பளம்கூட வாங்கவில்லை. அதற்குள் இன்னொரு கம்பெனிக்குத் தாவச் சொல்கிறாயே என்ற கேள்வியோடு பார்த்தவளை, "ஓ.. நீ கேம்பஸ்ல வந்தல்ல.. ஒன்னும் அவசரம் இல்ல. பொறுமையாத் தேடு." என்று சொல்லிவிட்டு ஹாஸ்டலுக்குள் புகுந்தான். 

இனிவரும் நாட்களில் இந்த வேடிக்கை ஜென்மத்திடம் எப்படிக் குப்பை கொட்டுவது என மலைத்து தன் ஹாஸ்டலை நோக்கி நடக்கத் தொடங்கினாள் அவள்.

**

மறுநாள் ஷிப்ட்டில், "ரிப்போர்ட் ஷீட் எங்க? நேத்தே வாங்கி வைக்கச் சொல்லியிருந்தேனே?" என்று கீர்த்தனாவிடம்  கேட்டான். அவள் மறந்து போயிருந்தாள். "போய் வாங்கிட்டு வரேன்" என்றாள். "ஷிப்ட் இன்ச்சார்ஜ் மீட்டிங்ல  இருப்பாரு.. சிஆர் சிலிட்டர்ல வச்சுருப்பாங்க. ரெண்டு ஷீட் கேட்டு வாங்கிட்டு வா" என்றவன் சிறிது யோசனைக்குப் பிறகு, லைன பார்த்துக்கோ.. நான் வாங்கிட்டு வரேன்" என்று சென்றான்.

சிஆர் சிலிட்டரில் தீபன்ராஜ் இருந்தான். நிவாஸ்மீது அவனுக்குக் கொஞ்சம் பொறாமை, அதிக வன்மம். தன்னைவிட வேலையில் கெட்டிக்காரன். அதிக மெஷின்களை ஆபரேட் பண்ணத் தெரிந்தவன் என்பதில் பொறாமை. கம்பெனிக்கு வரும் அழகான பெண்கள் எல்லாம் அவன் லைனுக்கே  போகிறார்கள் என்பதில் வன்மம். இதுவொரு தற்செயல் சம்பவம்தான் என்றாலும் நிவாஸுக்கு மச்சம் என்று தீபன்ராஜ் நினைத்தான். கம்பெனியில் அன்றைய தேதியில் அழகிகளென அவன் நம்பிய பவித்ராவும் சரண்யாவும் ஹச்ஆர் சிலிட்டர் ஆட்கள். கூடுதலாக இப்போது கீர்த்தனா. தீபன்ராஜுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை.

டிராவில் ரிப்போர்ட் பேப்பரை எடுக்கும்போது, "புதுசா ஒரு பொண்ணு சுத்திக்கிட்டு இருக்கு. உங்க லைனா?" என்று  கேட்டான். நிவாஸ் பேசாது தலையசைத்தான். 

"என்ன பேரு?"

"கீர்த்திகாவோ கீர்த்தனாவோ ஏதோ சொன்னா?"

"ஆள் கண்ணுக்கு லட்சணமா இருக்கா!"

அவன் பேசவில்லை.

"ஆமாணா நானும் பார்த்தேன். கச்சதமா இருக்கா. இன்னும் யாரும் கை வைக்கலன்னு நெனைக்கறேன்." என்று அருகிலிருந்த சப்போர்ட் ஆபரேட்டர் ஒத்து ஊதினான். 

"அது பார்த்தாலே தெரியுது." என்றான் தீபன்ராஜ் . இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

நிவாஸுக்கு முகம் அமைதியாக இருந்தது. மனம் கொதித்தது. இது புதிதல்லதான். இதற்குமுன் பலமுறை இப்படி வக்கிர பேச்சுகள் அங்கே நடந்தேறியிருக்கின்றன. எவ்வளவு கெட்ட அர்த்தத்தில் அவர்கள் பேச்சைத் தொடங்கியிருந்தாலும் சாதுர்யமாக  நல்ல அர்த்தங்களோடு உரையாடலை முடித்துவிட்டு வந்துவிடுவான். இப்போது வாய்திறக்காது இருந்துவிட்டான்.

ஹெச்ஆர் சிலிட்டருக்கு வந்ததும் காரணமில்லாமல் கீர்த்தனாவைத் திட்டினான். பேனல் போர்டு டிராவிலிருந்து கோட்டை எடுத்து அவள் மார்பில் வீசினான்.

"கோட் போடறதுக்குத்தான கொடுத்துருக்காங்க?" என்று சீறினான். அவளுக்கு ஒன்னும் புரியவில்லை. அவனே கோட் போடாமல்தான் இருந்தான். இங்குக் கோட் போடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; சம்பிரதாயம். ஷிப்ட் இன்ச்சார்ஜ்கூட கேள்வி கேட்டதில்லை. இவன் சக ஆபரேட்டர்தான். சீனியர் என்பதால் அதிகாரத்தைக் காண்பிக்கிறானா? மறுபேச்சு பேசாது கோட் போட்டுக்கொண்டவளை,  "போய்ச் செட்டிங் செக் பண்ணு." என்றான்.

ஹெல்பர் ஆசிர்வாதமும் மகேஷும் செட்டிங் போட்டுக்கொண்டு இருந்தனர். முகம் வாடிப்போய் அவர்களிடம் வந்தாள். ஆசிர்வாதம் நாற்பதைக் கடந்தவர். மகேஷ் ஐடிஐ முடித்தவன். இருவருமே ஒப்பந்த ஊழியர்கள். லோக்கலிலிருந்து வருபவர்கள். தனியார் கான்ட்ராக்ட் நிறுவனத்தின் மூலம் சம்பளம் பெறுபவர்கள். கம்பெனி ஆள், கான்ட்ராக்ட் ஆள் என்ற பாகுபாடற்ற பழக்கத்தில் எல்லோரும் வேலை செய்துவந்தனர். பழக்கம் தந்த நெருக்கத்திலும் புரிதலிலும் ஆசிர்வாதத்தை அண்ணா என்றுதான் நிவாஸ் அழைப்பான். வயதில் பெரிய வித்தியாசமில்லாது இருந்தால் ஒருமையில் பேசிக்கொள்வார்கள். அவர்களிடம்  போலி மாரியாதை கிடையாது. பாசாங்கு கிடையாது.   

"என்ன பாப்பா சத்தம் போடறான்?" என்று கேட்டார் ஆசிர்வாதம். "ஒன்னும் இல்லணா." என்று சொல்லி அவர்களுக்கு 'நைஃப்' செக் செய்துகொடுத்தாள். 

அவள் நைஃப் பாக்ஸிலிருந்து ஒவ்வொரு நைஃபாக எடுக்கும்போது ஒன்று கைதவறி அருகில் வாஸர் 'கிளின்' செய்துகொண்டிருந்த மகேஷ் பெருவிரல்மீது போட்டுவிட்டாள். அவன் சட்டெனச் சுதாரித்துக் கொண்டதால் மெல்லிய கீறலோடு போயிற்று. 

பேனல் போர்டு முன்னிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தவன் அவளை அறையலாம் என்று வந்து கைஓங்கி நிதானித்தான். 

"ஏனோதானோன்னு இருக்க இது ஒன்னும் உன் காலேஜ் எலக்ட்ரிகல் லேப் கிடையாது." என்று ஆத்திரத்தைக் கொட்டினான். கீர்த்தனாவுக்கு ரோஷம் கண்ணீராக வந்தது.

பேனல் போர்டு அருகே சென்று உட்கார்ந்துகொண்டு அழுதாள். 

"சேஃப்டி ஷூ போடாத இவன பேசறத வுட்டுட்டு அவள ஏன்டா வையற?" என்று உரிமையோடு கேட்டார் ஆசிர்வாதம். 

"அழுவுது நிவாஸு.." என்று கீர்த்தனாவை பார்த்துவிட்டுச் சொன்னான் மகேஷ். "என்ன பண்ணலாம் அதுக்கு. அவ என்ன கொழந்தையா.. மடில உக்கார வச்சு, செல்லம் கொஞ்சி கண்ணத் தொடச்சுவிடறதுக்கு?" என்று சொல்லிவிட்டு அக்கறையின்றி பேக்கிங் ஏரியாவைப் பார்த்துப் போனான்.

ஆசீர்வாதம் போய் அவளைத் தேற்றிக்கொண்டிருந்தார். பின் நிவாஸைப் பார்த்து, "என்னடா பிள்ளய மெரட்டறியாம்?" என்று சத்தமாய்க் கேட்டார்.

அவன் பேக்கிங் செக்ஷனில் இருந்துகொண்டு அவரை ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டான்.

கோபம் சரியானதுதான். ஆனால் தவறான ஆள்மீது காட்டிவிட்டதாக அதன்பிறகு நிவாஸுக்குப் பட்டது. வேனில் இருக்கும்போது கீர்த்தனாவை தன்னருகே அமர்த்திக்கொண்டு சமாதானம் பேசினான். மெலிதான குற்றவுணர்வு அவன் பேச்சில் படர்ந்திருப்பதை அவள் உணர்ந்தாள். 

**

கை காட்டாமலேயே வேன் டிரைவர்கள் அவளை அடையாளம் கண்டு நிறுத்தும் அளவிற்கான நாட்கள் ஓடின. நிவாஸிடமிருந்து பிரிந்து அவள் வேறு ஷிப்ட்டுக்கு மாற்றப்பட்டிருந்தாள்.  சீனியர் ஆபரேட்டர் யாரும் வந்திராத ஒரு பொழுதில் அசோக் லேலண்டிலிருந்து அர்ஜெண்ட் ஆர்டர் என்று வந்து நின்றார் புரடெக்ஷன் மேனேஜர் செந்தில். கீர்த்தனாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆர்டர் இல்லை என்ற நம்பிக்கையில் சரண்யா விடுப்பு எடுத்திருந்தாள். இப்போது நிலைமை மாறியிருந்தது. 

"தனியா ரன் பண்ணிடுவியாமா?" என்று கேட்டவரிடம் குருட்டுத் தைரியத்தில் தலையசைத்தாள் என்றாலும் மனதில் பதற்றம் இருந்தது.

பவித்ராவிற்கு ஃபோன் செய்தாள். வயிற்று வலி வரமுடியாது என்றுவிட்டாள். நிவாஜை அழைத்து விஷ்யத்தைச் சொன்னபோது கீர்த்தனாவைத் திட்டினான்.

"நீ ஏன் ரன் பண்ணுற? இன்னும் கத்துக்கலன்னு சொல்லு."

"அர்ஜெண்ட்ன்னு சொன்னாங்க."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல. அர்ஜெண்ட்ன்னு போன வாரம் ஓட்டுன காயிலெல்லாம் அப்படியே இருக்கு."

"நீங்க வரதா சொல்லிட்டேன்."

"யாரக் கேட்டுச் சொன்ன?"

"ரிப்போர்ட் ஷீட்ல மெயின் ஆபரேட்டர் எடத்துல உங்க நேம் எழுதிட்டேன்."

"கிழிச்சுப் போடு."

"யாருமா?" என்று மறுபடியும் வந்து நின்றார் புரடக்ஷன் மேனேஜர் செந்தில்.

"நிவாஸ் சார்.. ஷிப்ட்டுக்கு வர்றாராம்" என்றாள். "வரச்சொல்லு வரச்சொல்லு." என்றுவிட்டு பரபரப்பாக நடந்து சென்றார்.

"செந்தில் சார் வரச் சொல்லிட்டாரு வாங்க. அதுக்குள்ள செட்டிங் ரெடி பண்ணி வச்சிருக்கேன்" என்றுவிட்டு ஃபோனை சட்டென 'கட்' செய்துவிட்டாள்.

நிவாஸ் லைனுக்கு வந்து கீர்த்தனாவைப் பார்த்தபோது அவள் முகத்தில் பயம் ஏறிருந்தது. 

"வந்து ஒரு மாசம்தான் ஆச்சு. ரன் பண்ண தெரியாதுன்னு சொன்னா கடிச்சு வச்சுருவாங்களா உன்ன?"

கீர்த்தனா வாய் பேசாது மௌனித்தாள்.

"உங்களுக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கிடனும்?" 

திட்டிக்கொண்டே காயிலை ஓட்டினான்.  

ஷிப்ட் முடித்து வேனில் வரும்போது, "ஸ்ரீபெரும்புதூர்ல இறங்கிக்கலாமா?" என்று கீர்த்தனாவிடம் கேட்டான்.  ஏன் என்பதுபோல் கண்கொட்டிப் பார்த்தாள் அவள்.

"படத்துக்குப் போயிட்டுப் போகலாம்." என்றான். நெஞ்சு படபடத்தது அவளுக்கு. என்ன சொல்கிறான் இவன்? எந்த உரிமையில் படத்திற்குக் கூப்பிடுகிறான்?

"நாளைக்கு உனக்கு ஆஃப்தான.. வா போலாம்." என்றான். "தியேட்டருக்குப் போய்ப் பழக்கம் இல்ல. வரல." என்றாள்.

"இதுல என்ன பழகுறதுக்கு இருக்கு? நீ கூப்பிட்டதும் வந்தேன்ல. நான் கூப்பிட்டா வரமாட்டியா?" என்று கேட்டான். 

அவன் கேட்ட விதம் அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உதவிக்குக் கைமாறு கேட்கிறானா அல்லது பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறானா? 

ஸ்ரீபெரும்புதூர் வந்ததும், "அப்படியே நிறுத்துங்கணா" என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். அவளுக்கு முகம் சிவப்பேறிப் போய்விட்டது. அவன் போக்கைத் தடுக்கப் பலமற்றவளாக இருந்தாள் அவள். புத்தி நிதானமற்றுப்போனது. புத்தியை மீறி அவள் கால்கள் அவனிடம் சென்றன. யோசனைக்கு அவகாசம் தராதவனாய் அவளை வேனிலிருந்து இறக்கிக்கொண்டான்.

இப்படியே நடந்து ரூமுக்குச் சென்று விடலாமா என்றிருந்தது அவளுக்கு.

**

தன்னை நிவாஸ் தியேட்டருக்குக் கூட்டிச் சென்றதை கீர்த்தனா சொல்லியபோது பவித்ரா அவளை எச்சரித்தாள். 

"நிவாஸுக்கு அதிக இடம் கொடுக்காத, அவன் உன்ன எதாவது விபரீதத்துல கொண்டுபோய் விட்டுவிடுவான்" என்றாள். கீர்த்தனா புரிதலின்மையோடு அவளைப் பார்த்தாள். 

"நிவாஸ் எந்த ஒரு வரையறைக்குள்ளயும் அடங்காதவன். அவன்கூட இருக்கறப்ப எவ்ளோ பெரிய தப்பும் தப்பாத் தெரியாது" என்றாள். கீர்த்தனாவால் அவள் பேச்சிலிருக்கும் அர்த்தங்களை அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை.

அடுத்து வந்த மாதத்தில் மூவருக்கும் ஒரே ஷிப்ட் போடப்பட்டிருந்தது. மூவரும் ஒன்றாக இருப்பதில் மூவருக்குமே உற்சாகம் இருந்தது. 

அன்று கீர்த்தனா மெஷினில் காயிலை 'இன்' செய்து கொண்டிருக்கும்போது  தன்னருகில் இருக்கும் பேனல் போர்டுமுன் நின்றபடி மொபைலில் எதையோ தேடிக்கொண்டிருந்த நிவாஸை உதவிக்காகக் கூப்பிட்டாள். மற்ற லைன்களிலிலிருந்து வரும் சத்தத்திற்கு முன்னால் அவள் குரல் சுவடின்றித் தேய்ந்து அடங்கிற்று. கீர்த்தனா அவனருகில் சென்றபோது நிவாஸ் மொபைலில் எதையோ பார்த்து ரசிக்கும்படியாக இருக்கும் முகத்தோற்றத்தைக் கண்டு, அவள் அவனது மொபைல் திரையைப் பார்த்தாள். டிவிட்டரில் பார்ன் வீடியோக்களை ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தான் அவன்.  தன் ரசனைக்கு ஒவ்வாத குணமுடைய யாரோ தன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உள்ளுணர்வால் தொந்தரவு செய்யப்பட்டு, ஒருகணம் பின்னால் திரும்பிப் பார்த்தான்.  

கீர்த்தனா அவனது மொபைலைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்து முதலில் திடுக்கிட்டுத்தான் போனான். அப்போது அவளிடம் வெளிப்பட்ட அப்பாவித்தன முகபாவனையைப் பார்த்து பதட்டத்தை மீறிய  சிறுமுறுவல் வந்து அடக்கிக்கொண்டான்.  

தான் எதையும் பார்க்கவில்லை, தவறிப் பார்த்திருந்த போதிலும் அது தன் உணர்வை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்ற முகச் சமாளிப்பை வைத்துக்கொண்டு, "காயில் இன் ஆகல!" என்றாள். "இன் ஆகலனா அதுகூடச் சமாதான பேச்சுவார்த்தை நடத்தலாமா?" என்று இயல்பான பேச்சுக்கு சட்டென மாறி காயிலை மெஷினில் இன் செய்து காண்பித்தான். 

ரிப்போர்ட் ஷீட்டில் காயில் நம்பர் எழுத அதன் லேபிளை சரிபார்க்க வந்த பவித்ராவிடம் நடந்துவற்றைச் சொன்னான். அவள் தலையில் அடித்துக்கொண்டு "கூட யார் யார் இருக்காங்கன்னுலாம் பாக்க மாட்டியா?" என்று கேட்டாள். "நீ இருக்கறது மட்டும்தான் தெரியுது." என்று அவளை மெச்சினான்.

"விவஸ்த கெட்டவனே.. ரெண்டு பேரூம் ஒன்னா இருந்தா நீயும் கெட்டுப் போயிடற.. என்னையும் சேர்த்து கெடுத்தர்ற.." என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டு கீர்த்தனா அருகில் இருக்கிறாள் என்று பொறிதட்டியதும் அங்கிருந்து நகர்ந்தாள்.

வேனில் ரூமுக்குச் சென்று கொண்டிருக்கும்போது, தன் முன் இருக்கையில் கீர்த்தனாவோடு அமர்ந்திருந்த பவித்ராவை தன்னிடம் வரச்சொல்லிக் கூப்பிட்டான் நிவாஸ். கடைசி இருக்கையில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. உடனிருந்த சிடிஎல் ஆபரேட்டர் வல்லக்கோட்டையில் இறங்கியிருந்தான். அப்போது அவன் தன் இருக்கைமேல் ஒளிர்ந்திருந்த லைட்டை அணைத்திருந்தான். 

"லைட் ஆஃப் பண்ணிட்டு எதுக்குக் கூப்படற? கை போடப்போறியா?" என்று கேட்டாள். 

கீர்த்தனாவை அருகில் வைத்துக்கொண்டு அவள் அப்படிக் கேட்டது நிவாஸ்க்கு நெருடலாக இருந்தது.

"சோம்பேறி மூக்கி!" என்று அவளைப் பிடிக்காதவனாய்ச் சொன்னான்.

"போடா மாருறுஞ்சி!" என்று மேலும்  கூடுதலாய் பழி வாங்கினாள். 

சற்று அமைதியாய் இருந்துவிட்டு, பின் இருக்கை லைட்டை எரியவிட்டான். பவித்ரா  அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள். 

"நாளைக்குத் தியேட்டருக்குப் போலாமா?"

"நீ தியேட்டருக்கு எதுக்குக் கூப்பிடவன்னு தெரியும். வேலையப் பாரு!"

வேனிலிருந்து இறங்கி ஹாஸ்டலுக்கு நடந்து கொண்டிருக்கும்போது கீர்த்தனாவுக்கு அடுக்கடுக்கான யோசனைகள் வந்து போயின. 

கண்ணாடி முன் நின்று முகப்பருவிற்குக் கிரீம் ஒன்றைத் தடவிக்கொண்டிருந்த பவித்ராவை, உடைமாற்றி வெகு அமைதியாய் படுக்கையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் கீர்த்தனா.  

அவள் பார்வை வெறிப்பைப் பார்த்துவிட்டு, "என்ன யோசனை பின்னுது! வீட்டு ஞாபகம் வந்துடுச்சா?" என்று பவித்ரா கேட்டாள்.

"நிவாஸ் தியேட்டருக்கு எதுக்குக் கூப்பிடுவான்?" என்று கேட்டாள் கீர்த்தனா. 

தனக்கும் அவனுக்குமான உரையாடலில் மௌன சாட்சியாக அவளும் உடனிருந்திருக்கிறாள் என்பது அப்போதுதான் பவித்ராவுக்கு உரைத்தது. அவள் கேள்வியில் இருக்கும் விபரீதத்தைப் புரிந்துகொண்டாள். தன்னைப் பற்றியும் நிவாஸ் பற்றியும் தெரியப்படுத்துவதற்கான சரியான தருணத்தில் இருந்து கொண்டிருப்பதாக பவித்ராவுக்குத் தோன்றினாலும் ஒருவித வேதனையின் பயத்திலேயே அவள் கீர்த்தனாவை அணுகினாள்.

டிப்ளமோ முடித்து பவித்ராவும் நிவாஸும் ஒரே சமயத்தில் ஸ்டீல்லேண்ட் இண்டியாவுக்கு வேலைக்குத் தேர்வாகி வந்தவர்கள். புதிய சூழல், இடம், மனிதர்கள், பொறுப்புகள். அதனால் தொற்றிக்கொண்ட பயம் என நாட்களை அப்போது கடத்தத் தொடங்கியிருந்தாள் பவித்ரா. இன்ன காரணம் என்று கண்டுகொள்ள முடியாத மனச்சிக்கல். அதனால் வரும் பாதுகாப்பின்மை உணர்வால் பலமற்று வாழ்ந்து வந்தாள். 

முச்சந்தியில் இருந்து சற்றுமுன் இறங்கி ஹாஸ்டலுக்கு வந்திருந்த முன்னூறு மீட்டர் தொலைவைக் கடக்க, வந்த புதிதில் பவித்ராவிற்கு அவ்வளவு பதைபதைப்பாக இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் இப்போது இருப்பதுபோல மண்சாலை தெருவிளக்கு சீராக இல்லை. முச்சந்தியில் இருந்து ஹாஸ்டல்வரை இருக்கும் மண்சாலையின் இடதுபுறம் முழுக்க ஏரிக்காடுகள். வலதுபுறத்தில் மென்ஸ் ஹாஸ்டல். அதையொட்டிருந்தது இரவு பத்துமணி வரை ரணகளப்படும் ஒயின்ஷாப். அதையடுத்து வெட்டவெளி நிலங்களும் முட்புதர்களும். பவித்ராவின் ஹாஸ்டல் இதையெல்லாம் தாண்டி மண்சாலையின் கடை எல்லையில் இருந்தது. இந்தியாவிலிருந்து பிரிந்துகிடக்கும் இலங்கைத்தீவு போல் தன் ஹாஸ்டல் இருப்பதாக அவளுக்குத் தோன்றும். முச்சந்தி நிறுத்தத்திலிருந்து பார்த்தால் மென்ஸ் ஹாஸ்டல் தெரிவதுபோல் இவள் ஹாஸ்டல் தெரியாது. முப்பதுக்கும் மேற்பட்டோர் இருக்கும் விடுதிதான். எல்லோருமே சிப்காட் கம்பெனிகளில் பணிபுரிந்து வரும் யுவதிகள்தான். ஆனால் ஸ்டீல்லேண்ட் இண்டியாவிலிருந்து அன்று இவள் ஒருத்தி மட்டும்தான் இருந்தாள். 

மென்ஸ் ஹாஸ்டலை ஒட்டியிருந்த ஒயின் ஷாபின் எதிர்ப்புறத்தில் இருந்த ஒரே மின்விளக்குக் கம்பம்தான் அவள் ஹாஸ்டல் வரையான மண்சாலை பாதைக்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தது. குடிபோதையில் மின்விளக்கை அடிக்கடி அடித்து நொறுக்கிவிடுவார்கள். நகராட்சியில் கம்ப்ளைன்ட் செய்ததும் புதிது மாட்டுவார்கள். ஓரிரு வாரம் வரைதான் அதற்கு ஆயுள் என்று ஏற்கனவே குடிகாரர்கள் தீர்மானித்து வைத்திருந்தார்கள். சில முயற்சிகளுக்குப் பின் நகராட்சி கண்டுகொள்ளவில்லை. மின்விளக்குக் கம்பம் குருடாயிப்போனது. மின்கம்பத்தில் இருந்து ஹாஸ்டல் வரை இருக்கும் இருநூறுமீட்டர் தூரத்தை செகண்ட் ஷிப்ட் முடித்து இருளில் கடக்க அவளுக்கு நெஞ்சு படபடக்கும். மையிருட்டில் பதுங்கியிருந்து யாரும் முட்காட்டுக்குள் தன்னை இழுத்துச் சென்றாலும் உதவ நாதியில்லை என்ற சுயபச்சாதாபம் அவள்மீதே வரும்.

அதே ஷிப்ட்டில் ஸ்டீல்லேண்ட் இண்டியா வேனிலிருந்து தன்னுடன் ஒருவன் மென்ஸ் ஹாஸ்டலுக்குள் சென்று கொண்டிருந்தது நம்பிக்கையாக இருந்தது பவித்ராவுக்கு. மூன்றில் ஒரு பங்கு தூரம் அளவிற்காவது அவனது இருப்பு இருக்கிறதே என்ற நினைப்பு பாதுகாப்பு உணர்வைத் தந்தது. அவன் யாரென்று தெரியாத போதிலும், தான் பணிபுரியும் அதே கம்பெனியில் பணிபுரிகிறான் என்ற நூலிழை தொடர்பைப் பற்றிக்கொண்டு, "தனியாப் போகப் பயமா இருக்கு. ஹாஸ்டல் வரைக்கும் விட்டுட்டுப் போறீங்களா?" என்று பயம் தந்த ஆற்றமையால் மனம் விட்டுக்கேட்டாள். அவனும் சளைக்காது ஹாஸ்டல்வரை வந்துவந்து செல்வான். அவன் நிவாஸ் என்றுகூட அப்போது அவளுக்குத் தெரியாது. அப்போது அவன் சிடிஎல் சிலிட்டரில் டிரெயினியாக இருந்தான். பின்னாளில் இருவரும் ஹெச்ஆர் சிலிட்டரில்  சக ஆபரேட்டர்களாகச் சந்தித்துக்கொண்டார்கள்.

அதன் பிறகான காலத்தில் எல்லோரும் புகார்செய்து ஒயின்ஷாப்பை அங்கிருந்து அகற்றிவிட்டார்கள். ஒயின்ஷாப் இருந்த இடத்தில்தான் இப்போது மெஸ் இருக்கிறது. முள் காடுகளை அழித்து ஒருசில வீடுகள் அங்கு இப்போது வந்துவிட்டன. மின்கம்பமும் சீராகி இருந்தது.

கம்பெனியில் கட்டாயமாக ஆண்களிடம் பழக்கப்பட வேண்டிய சூழலில், நிவாஸின் ஸ்பரிசத்தத்தை பவித்ரா மனம் விரும்பி ஏற்றது. நம்பகத்தன்மை ஏற்படுத்திய நட்பு அடுத்தடுத்து நெருக்கத்தையும் பகிர்தலையும் உண்டுபண்ணின. முதலில் மனம் தாவியதா உடல் தாவியதா என்பதில் பவித்ராவுக்கு இன்னமும் புரிதலில்லை. நிவாஸ் இரண்டையும் கவ்விக்கொண்டான். அவனிடம் இருக்கும்போது தவறு செய்கிறோம் என்ற குற்றவுணர்வு கலைந்த காரணம் இன்றுவரை அவளுக்குத் தெரியவில்லை. சமூகம் கற்பித்த ஒழுக்க வரையறை சுவடின்றி அழிந்தது. ஓர் ஆணின் தீண்டலை அனுபவிக்க மனமும் உடலும் ஒன்றிய பிறகு மற்ற கற்பிதங்கள் அர்த்தமற்றுப் போயின. சந்தர்ப்பம் கிடைக்கும்போது வேனில், தியேட்டரில், ஏன் கம்பெனியிலேகூட மனமொத்து சில்மிஷங்கள் செய்திருக்கிறார்கள்.  

இதையெல்லாம் தெரிந்து கொண்டபோது பவித்ராவை சரிவரப் புரிந்துகொள்ள முடியாத தன்மையற்றவளாக கீர்த்தனா இருந்தாள். அன்று ஒரு வார்த்தைகூடப் பேசாது பவித்ரா சொல்வதைக் கேட்டுவிட்டு உறங்கிப்போனாள்.

அடுத்த நாள் கம்பெனிக்குச் சென்றதும், முதல் வேலையாக ஷிப்ட் முடித்து வந்த வாலாஜாபாத் சரண்யாவிடம், "நான் உங்க ரூமுக்கு மாறிக்கவா?" என்று கேட்டாள்.  "இப்போ அவைலபிலிட்டி இல்ல. பார்த்துட்டுச் சொல்றேன்." என்றாள் அவள்.

"உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?" என்று அடுத்து ஃபோன் செய்து சரண்யா கேட்டபோதுதான் பவித்ராவுக்கு விஷயம் புரிந்து மனம் கனத்தது. கீர்த்தனாவை குறைபட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. காதலையே பொறுக்கித்தனம் என்றவள். காமத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

அன்று ஷிப்ட்டில் அவளைக் கண்ணெடுத்துப் பார்க்கவே பவித்ராவுக்குச் சிரமமாக இருந்தது. கீர்த்தனாவுமே இவளிடம் ஒட்டவில்லை. தனித்துக் கவனித்துப் பார்த்தபோது நிவாஸிடமும் அவள் நெருங்கவில்லை என்பது பவித்ராவுக்குப் புலப்பட்டது. 

சட்டென விலகிவிட முடிவெடுத்துவிட்டாளே! இதுவரை அவள்மீது தான் காட்டிவந்த பரிவு, கரிசனத்திற்கெல்லாம் அர்த்தமே இல்லையா? பழக, நம்ப, உடனிருக்க, தோழமையை ஏற்க என எல்லாவற்றிற்கும் கற்பு மட்டும்தான் அளவுகோலா?

ரூமிலும் பட்டும் படாமலும்தான் கீர்த்தனா இருந்தாள். புறக்கணிப்பின் வலி பவித்ராவுக்குக் கூடிக்கொண்டே போயிற்று. தன்மீதான தவறான புரிதலிலிருந்து அவளை மீட்டெடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி,  தன்னிடம் இருக்கும் குறைந்தபட்ச நியாயத்தையாவது கீர்த்தனா ஏற்கும்படி செய்துவிட வேண்டும் என பவித்ராவின் மனம் பரிதவித்தது.

சுடியிலிருந்து நைட்டிக்கு மாறி பெட்டில் சாய்ந்து மொபைல் நோண்டிக்கொண்டிருந்தவள் அருகில் அமர்ந்து, "ரூம் மாறப்போறீயா?" என்று கேட்டாள்.

எதிர்பாராமல் வந்த கேள்வியை கீர்த்தனாவாலும் எதிர்கொள்ள முடியவில்லை. 

"சும்மா தோணுச்சு.." என்று மழுப்பினாள்.

"முதல்ல ஒரு விஷயத்தை உன்கிட்ட தெளிவுபடுத்திடறேன். ஒரு பையன்கூட செக்ஸ் வச்சுக்கிட்டதனால நான் தப்பான பொண்ணுலாம் இல்ல.."

"இல்ல நான் அப்படி மீன் பண்ணல."

"நிவாஸும் தப்பான பையன் கெடையாது. மே பீ.. செக்ஸ் தப்பான விஷயமா படறதுனால நாங்க அப்படித் தெரியலாம். நாங்க தப்பே செய்யலன்னு சொல்ல வரல. ஆனா எதையும் நாங்க திட்டமிட்டுப் பண்ணிக்கல. எங்களமீறி இயல்பா எல்லாம் நடந்துருச்சு"

கீர்த்தனா அமைதியாக இருந்தாள்.

"கெட்ட பழக்கம் வச்சிருக்கிற நல்ல பசங்களும் இருக்காங்க. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பொறுக்கிகளும் இருக்காங்க. நம்ப கம்பெனியிலேயே நெறைய உதாரணம் இருக்கு. உனக்கே அதெல்லாம் தெரிய வரும்" என்றவள், கொஞ்சம் யோசனைக்குப் பின், "நிவாஸப் பத்தி என்ன நெனைக்கிற?" என்று கேட்டாள்.

"பெருசா யார் மேலயும் எனக்கு எந்த ஒபினியனும் இல்ல." என்று வெளிப்படை தன்மை இல்லாமல் சொன்னாள்.

"அவன் தியேட்டருக்கு உன்ன கூட்டிப்போனதா சொன்னதும் எனக்குப் பதட்டம் ஆயிடுச்சி. என்கிட்ட நடந்துகிட்ட மாதிரி ஏதாவதுன்னு மனம் பதறிடுச்சு. அவனப் பத்தன முன்புரிதல் இருக்குனாலும் ஒரு பொண்ணா அந்த எடத்துல என்னால அப்படி யோசிக்காம இருக்க முடியல.. சந்தேகம் வந்து அவன நேரல பார்த்துத் திட்டனேன். அன்னைக்கு படத்துக்குப் போற ப்ளான்ல இருந்தானாம். நீ ஷிப்ட்டுக்கு கூப்பிட்டதால முடிச்சுட்டு அடுத்த ஷோக்கு போலாம்னு கம்பெனிக்கு வந்துருக்கான். தனியாப் போகப் பழக்கமில்லாததால உன்ன கூப்பிட்டுருக்கான். அவகொழந்த மாதிரி இருக்கா.. என் தங்கச்சியின் சாயல் அவகிட்ட இருக்கு.. என்னை ஏன் அப்படி நினைச்சேன்னு எங்கிட்ட கேட்டான்."

கீர்த்தனா இமை கொட்டாது அவளையே பார்த்திருந்தாள். 

"நான் யார் பக்கமும் நியாயம் சேர்க்கல.. வக்காலத்து வாங்கல.. ஆனா உண்மைனு ஒன்னு இருக்குல்ல.. அதத் தெரியப்படுத்தறதுல தப்பு இல்லையே.. நீ என்ன அவாயிட் பண்ணலாம். ரூம் மாறலாம். வெறுக்கலாம். அது உன் சாய்ஸ்.. ஆனா நிவாஸ வெறுத்துடாத. அவன் நல்லவன்" என்று சொல்லிக்கொண்டே குரல் உடைந்து கண்ணீர் உகுத்தாள். 

கீர்த்தனாவுக்கு மனம் தாளாது உணர்ச்சிப் பெருக்கெடுத்தது. ஏன் என்று தெரியவில்லை. பவித்ராவை அணைக்கத் தோன்றியது. சுவரில் சாய்ந்திருந்தவள் அவளைத் தாவிவந்து கட்டிக்கொண்டாள்.

அன்று அப்படி மனம் உருகியிருந்தாலும் அடுத்த வந்த சில மாதங்கள் வரைக்குமே, பழக்கத்தைத் தாண்டி ஒழுக்கம் என்று வரும்போது அவர்கள் இருவர்மீதும் ஒவ்வாமையின் தொற்று கீர்த்தனாவுக்கு இருந்துகொண்டிருந்தது. அதையும் மீறி பவித்ராவின் போலித்தனமற்ற மனம் கீர்த்தனாவைக் கவ்விக்கொண்டதால் ரூம் மாறாமல் அவளுடனே இருந்து வந்தாள்.

மெல்ல இனிவரும் நாட்களில் தன்மீதான நல்ல அபிப்பிராயத்திற்கு அவள் வரத் தொடங்கிவிடுவாள் என்று பவித்ரா நம்பயிருந்த ஒரு நாளில்தான் அந்த விபத்தும் நேர்ந்தது. 


                                           2

ருத்துவமனைக்கு புரடெக்ஷன் மேனேஜர் வந்தபோது ஐசியூ அறையின் வெளிப்புறத்தில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் இரவு மணி ரெண்டை காட்டியது. நிவாஸும் கீர்த்தனாவும் அவரின் வருகைக்காகக் காத்திருந்தது போல முகபாவணயைக் காட்டிக்கொண்டார்கள். 

வந்தவர் ஐசியூ அறையின் கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்தார். மருத்துவமனை உபகரணங்களின் நெடி அவர் நாசியில் மோதியது. தலைக்குமேல் சுழலும் மின்விசிறியின் சத்தம் அந்நியமாகப்பட்டது.  

"போலீஸ் வந்து விசாரிச்சாங்களா?" என்று இருவரையும் பார்த்துக் கேட்டார். இதுவரை யாரும் வரவில்லை என்பதாக நிவாஸ் சொன்னான்.

"ஸ்டாப்ல நின்னுட்டு இருந்த பொண்ணுக்கு எப்படி ஆக்சிடெண்ட் ஆச்சு?" 

"ஸ்டாப்ல ஒரு சிமெண்ட் திட்டு இருக்கும் சார். அதுமேலதான் எப்பவும் உக்காந்துட்டு இருப்பா. நைட் ஷிப்ட்டுக்கு வெயிட் பண்றப்ப வேன் வர லேட்டானா அப்படியே தூங்கி விழுந்துடுவா"

"ஹெவேல யாராவது உட்கார்ந்து தூங்குவாங்களாப்பா!?"

"அவ ஷேஃபாதான் சார் இருந்திருப்பா. வந்தவன் மேலதான் தப்பு இருக்கணும். ஏற்கனவே அங்க விபத்து பகுதியின் போர்டு போட்டிருக்கும். அந்த டர்ன்ல வர்றப்ப பழக்கப்பட்டவங்களே கொஞ்சம் தடுமாறுவாங்க. வேன் டிரைவர்ஸ்கூட ஸ்லோ  பண்ணிதான் வருவாங்க. கிரிட்டிக்கலான ஜங்ஷன் அது. வந்தவன்தான் தப்பா மூவ் பண்ணி இருந்திருக்கணும்" 

"போலீஸ்காரங்க கேட்டா இந்தத் தூங்குன விஷயத்தல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க" என்று எச்சரித்துவிட்டு சீப் டாக்டரைப் பார்த்துவிட்டு வருவதாகச் சென்றார்.

கீர்த்தனா மிக மோசமாக நிலைகுலைந்திருந்தாள். அவளை கேண்டினுக்குக் கூட்டிச் சென்று டீ வாங்கிக் கொடுத்தான். அவளுக்கு முகம் உலர்ந்து போயிருந்தது. கண்ணீர் கோடுகள் கன்னங்களில் காய்ந்து போயிருந்தன. முகம் கழுவி கொண்டாள். ஷிப்ட் இன்ச்சார்ஜிடமிருந்து ஃபோன் வந்தது. ஸ்பீக்கரில் போட்டான்.  

"எங்கப்பா இருக்கீங்க?"

"கேண்டீன்ல்ல சார்."

"வார்டுக்கு வாங்கப்பா.. பொண்ணு எறந்துடுச்சாம்."

கேட்ட மாத்திரத்தில் கீர்த்தனா வீறிட்டு அழத் தொடங்கிவிட்டாள். கேண்டீனில் அவளைக் கவனித்து இராதவர்களாய் இருந்த எல்லோரும் அழுகுரல் கேட்டு அவள் பக்கம் திரும்பிப் பார்த்தனர். 

நிவாஸ் அவளை வராண்டாவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தமர்ந்தான். திடவுறுதி இல்லாதவனாய் தனது தோளில் முகம் வைத்தழும் கீர்த்தனாவைத் தேற்றக்கூட மனதில் சத்தற்றவனாக இருந்தான். அவனுக்குக் கண்கள் சிவந்து போயின. கீர்த்தனா அவளுக்குரிய பலவீன குணத்துடன் அழுதுகொண்டிருந்தாள். அவளின் குணத்தைத் தான் அடைய விரைவாய் உந்தப்பட்டிருப்பதாகப்பட்டது நிவாஸுக்கு.   

தன்னை நிதானித்துக்கொள்ள முயன்ற போதிலும் அவனுக்கு நீர்த்துளி கண்ணோரம் கனிந்து விழக்காத்திருந்தது. அவன் கையைப் பற்றி அழுதுகொண்டிருந்த கீர்த்தனாவின் விரல்களில் அந்த முதல் துளி விழுந்தது. 

**

அந்த வாரத்தில் தகுந்த நாளொன்றைத் தேர்வு செய்து பவித்ராவுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு, தனக்கான பணிகளுக்காய் ஊழியர்களை இழுத்துக்கொண்டது நிர்வாகம். அடுத்து வந்த தீபாவளி பண்டிகையால் புரெடக்ஷன் நிறுத்தப்பட்டது. போனஸ் பெற்றுக்கொண்டு பணிபுரிவோர் எல்லோரும் ஊருக்குச் சென்றனர். பவித்ராவை இழந்த துயரத்திலிருந்து மீள இந்த விடுமுறை தேவைதான் என்றுபட்டது கீர்த்தனாவுக்கு. பெற்றோர்களுடன் இருக்கும் நாட்கள் தன்னை ஆசுவாசப்படுத்தும் என அவள் நம்பினாள்.

விடுமுறை முடித்துக்கொண்டு தனக்கான ஷிப்ட்டுக்கு வந்துசேர்ந்து, நிவாஸ் பற்றி விசாரித்தபோது அவன் இன்னும் ஊரிலிருந்து வரவில்லை என்பதைத் தெரிந்துகொண்டாள். கம்பெனி விதிகளை, கட்டுப்பாட்டை மதிக்காதவன். பொறுப்பில்லாத புத்திசாலி. வருவதற்குக் கூடுதலாக இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்வான் என்று அவளுக்குத் தோன்றியது. எந்தளவுக்கு ஷிப்ட் இன்ச்சார்ஜ் அவனுக்குக் சலுகை தரப் போகிறார்கள் என்பதில்தான் அவள் கவலையாகவிருந்தாள். 

இரண்டு நாட்கள் கழித்தும் நிவாஸ் கம்பெனிக்கு வராமல் இருப்பதில் வேறு என்னவோ இருப்பது போல்பட்டது அவளுக்கு. அவனுக்கு கால் செய்தபோது 'ஸ்விட்ச் ஆப்' என்று வந்தது. பவித்ரா, நிவாஸ் இருவரும் இல்லாதிருப்பதில் மிக இறுக்கமாய் ஷிப்ட் நகர்ந்தது. லைனுக்கு வந்து ஷிப்ட் இன்ச்சார்ஜ், புரெடக்ஷன் மேனேஜர் என எல்லோரும் நிவாஸ் பற்றிக் கேட்டுவிட்டுச் சென்றனர். "அவன் லைனுக்கு வந்தா என்ன பாக்காம உள்ள விடாதீங்க." என்று கோபத்தோடு சொல்லிவிட்டுச் சென்றார் புரடெக்ஷன் மேனேஜர்.

ஃபஸ்ட் ஷிப்ட் முடிந்து கீர்த்தனா வேனிலிருந்து முச்சந்தி நிறுத்தத்தில் இறங்கியபோது வெயில் பலமாய் முகத்தில் அடித்தது. பவித்ராவுக்கு விபத்து நடந்த இடத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். பின் ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள். வழியில் நிவாஸின் ஹாஸ்டலைப் பார்த்தாள். வெள்ளைத்தாடி வாட்ச்மேன் தாத்தா கேட்டில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் புரட்டிக் கொண்டிருந்தார். நிற்காமல் நடந்தாள். தொலைவில் தெரியும் தன் ஹாஸ்டலின் மேல்புற வானவெளியைப் பார்த்தாள். வெறுமையாக இருந்தது. 

பவித்ராவின் இழப்பு, நிவாஸின் இருப்பின்மை இரண்டும் அவளுக்கு அனாதை உணர்வைத் தந்தது. ஷிப்ட் முடித்து இதற்குமுன் இப்படித் தனியாக நடந்து வந்திருக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தாள். பவித்ராவோ நிவாஸோ யாரேனும் ஒருவர் அப்போதெல்லாம் உடனிருந்திருக்கிறார்கள். சென்ற மாதம் ரத்தமும் சதையுமாக உடனிருந்தவள் இன்று இல்லை எனும்போது விதி இழைக்கும் அக்கிரமங்களை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நேராக ரூமிற்கு வந்து கைகால் முகம்கூடக் கழுவாமல் பெட்டில் சுருண்டு படுத்தாள். சட்டென கண் அயர்ந்தவளை வாலாஜாபாத் சரண்யாவின் ஃபோன் கால் துயில் கலைத்தது. 

"சொல்லு சரண்யா?"

"ரூம்லயா இருக்க?"

"ம்"

"இங்க வந்தர்யா? ரூம்மேட்கிட்ட பேசிட்டேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு சொல்றா!"    

"ஏன்?"

"ஏன்னா?.. நீதான ஒரு டைம் கேட்டுருந்த?"

"இல்ல. இங்கயே இருந்துக்கறேன்."

"தனியா இருக்கப் பயமா இல்லயா?"

"பிரச்சன இல்ல. பாத்துக்கறேன் நான்.."

"Sure ah?"

"Sure!"

தொடர்பைத் துண்டித்துவிட்டு பவித்ராவின் படுக்கையைப் பார்த்தாள். அவள் உடல் அழுந்திய தடயங்கள் இன்னும் அப்படியே இருந்தது. அதில் அவள் உருவம் படுத்துக்கொண்டு தன்னைப் பார்ப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. 

எழுந்து ஜன்னலைத் திறந்துவிட்டாள். சன்மான சூரியவொளி ஊடுருவி படுக்கையில் விழுந்தது. வெயிலின் உக்கிரம் தணிந்திருந்தது. பவித்ராவின் படுக்கையில் தலை வைத்துச் சாய்ந்தாள். ஜன்னல் வழியாக ஊடுருவிய மழைத்துளியொன்று அவள் மணிக்கட்டில் பட்டுத் தெறித்தது. வெயிலடிக்கும்போது பெய்யும் மழைக்கு ஒரு வசீகரம் இருக்கிறது.

மொட்டை மாடிக்குச் சென்று காயப்போட்ட துணிகளை ஒவ்வொன்றாக எடுத்தாள். மேல் வானத்தைப் பார்த்தாள். வானம் இப்போது ஓவியம்போல் காட்சி அளித்தது. கருக்கலே இல்லை. 

"கண்ணீர் மனச சுத்தப்படுத்துவதுபோல இந்த மழை மண்ணைச் சுத்தப்படுத்துது. எத்தனை அழகான விஷயம் இது!" என்று ஷிப்ட்டில் மழைவந்த ஒருபொழுதில் கீர்த்தனா சொல்லியதற்கு, "மழை உனக்கு அழகு. எனக்கு இம்சை. இந்நேரம் கொடியில காயபோட்டிருந்த துணிலாம் நெனைஞ்சிருக்கும்!" என்று பவித்ரா குறைபட்டுக்கொண்டது நினைவில் வந்தது. 

**

நிவாஸ்மீதான வருத்தங்களை அடுத்தடுத்து வந்த நாட்களில் கீர்த்தனாவின் மனம் திரும்பத் திரும்பப் பட்டுக்கொண்டிருந்தது. ஃபர்ஸ்ட் ஷிப்ட்டின் முடிவில் பேனல் போர்டு முன்னமர்ந்து அன்றைய புரடெக்ஷசன் ரிப்போர்ட்டை தயார்செய்து கொண்டிருந்தவளை நோக்கி வந்தவனாய், "யார் ஷிப்ட் இன்ச்சார்ஜ்?" என்று கேட்டுக்கொண்டே அவளருகில் லக்கேஜ் பேக்கை வைத்தான் நிவாஸ். 

அவனைப் பார்த்ததும் கீர்த்தனாவுக்கு மனமும் விழியும் நிரம்பியது. உள்ளத்தில் பூரிப்போடு "பட்டேல் சார்." என்றாள். 

"உன்ன லைன்ல விடக்கூடாதுன்னு புரடெக்ஷன் மேனேஜர் சொல்லிட்டுப் போயிருக்காருடா!" என்றார் ஆசிர்வாதம்.  "ஷிப்ட் முடிஞ்சதும் பேக்க வேனுக்கு எடுத்துட்டுப் போயிரு" என்று சொல்லிவிட்டு நிவாஸ் மேனேஜர் அறை நோக்கி நடந்தான். 

வேனில் கீர்த்தனா அவனுக்காகக்  காத்திருந்தாள். வேன் புறப்படத் தயாராகும் நேரத்தில் வந்தமர்ந்தான் நிவாஸ். 

"மேனேஜர் என்ன சொன்னாங்க?" என்று கேட்டாள். "எப்பவும் சொல்றதுதான்!" என்று சலித்துக்கொண்டான்.

"ஏன் இத்தன நாள் லீவ்?" 

அவன் பேசாமல் இருந்தான்.

"ஃபோன் பண்ணனேன். ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்தது."

"டிஸ்பிளே போயிடுச்சு. சரிபண்ண கொடுத்திருந்தேன்."

அவன் பேச்சில் அதிகப்படியான சோர்வு இருந்தது. வேன் புறப்படத் தொடங்கியபோது கடைசி இருக்கை காலியாக இருப்பதைப் பார்த்துவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டான்.  பயணக் களைப்பு அவன் உற்சாகத்தைக் குலைத்திருப்பது போல்பட்டது அவளுக்கு.

சில வாரங்கள் முடிவடைந்தபோது நிவாஸ் தன் இயல்பான குணங்களிலிருந்து பலவாறு மாற்றம் அடைந்திருப்பதை கீர்த்தனா உணர்ந்தாள். சரியான ஷிப்ட்டுக்கு வருவதை அவன் முறையாகப் பின்பற்றத் தவறியிருந்தான். ஃபர்ஸ்ட் ஷிப்ட்டுக்குப் பதிலாக செகண்ட் ஷிப்ட்டுக்கும், செகண்ட் ஷிப்ட்டுக்குப் பதிலாக நைட் ஷிப்ட்டுக்கும் மாறிமாறி அவன் விருப்பத்திற்கு ஏற்றார்போல் வந்து போய்க்கொண்டிருந்தான். அந்த மாதத்தில் புரடெக்ஷன் அதிகம் இல்லை, கஸ்டமர்களின் நெருக்கடி இல்லை என்பதால் புரடெக்ஷன் மேனேஜர், ஷிப்ட் இன்ச்சார்ஜ் போன்ற உயர்மற்ற ஊழியர்கள் கூட அவனைப் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. ஆரோக்கியமற்ற அவன் போக்கின்மீது கீர்த்தனா மட்டுமே அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தாள். 

முச்சந்தி நிறுத்தத்தில் காத்திருக்கும் போது அவனுக்கு ஃபோன் செய்வாள். சில நேரங்களில் எடுப்பான். சில நேரங்களில் எடுக்காமல் விட்டுவிடுவான். அவன் பேசுவதே அபூர்வமாக இருந்தது. அவனைப் பார்ப்பதுகூட எப்பவாவது மட்டுமே நிகழும் அறிய சம்பவமாக மாறும் அளவிற்கு கீர்த்தனாவிடமிருந்து விலகிப் போயிருந்தான்.  எதிர்பாராவிதமாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவன் கீர்த்தனாவின் ஷிப்ட்டுக்கு வருவது தங்கள் இருவருக்கும் நடக்கும் அபூர்வ சந்திப்பு போன்றே அவளுக்குத் தோன்றும்.

மனவாட்டம் கொண்டு, சோகம் கலந்த முகத்தை அவன் சுமந்திருப்பது கீர்த்தனாவுக்குப் பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவளிடம் வெளிப்படையாக எதையும் பேச திராணியற்றவளாக அவள் இருந்தாள். 

அத்தி பூத்ததுபோல் ஒருமுறை கீர்த்தனாவிடம் கடனாக அவன் பணம் கேட்டபோது அதை அவள் நேசிக்கவே செய்தாள். தன்னிடம் கடன் கேட்கும் அளவிற்காவது அவன் தன்மீது நல்லபடியான புரிதலைக் கொண்டிருந்தது அவளுக்கு இதத்தைத் தந்தது. 

கடன் பெற்றுக்கொண்ட அடுத்த நாளே, கம்பெனி முன் வந்துநின்ற வேனிலிருந்து இறங்கி என்ட்ரன்ஸ் முன்னாடியே வாந்தி எடுத்தான். சக ஆபரேட்டர் ஒருவன் வாய் கொப்பளிக்க வாட்டர் பாட்டிலை அவனுக்குக் கொடுத்தபோது, அவனிடமிருந்து வந்த பீர் வாசனையைத் தெரிந்துகொண்டு, "சரக்கு அடிச்சுட்டா ஷிப்ட்டுக்கு வந்த?" என்று கேட்டான். 

நிவாஸ் வாய் துடைத்து முகம் கழுவிவிட்டு என்ட்ரன்ஸ் படியிலேயே உட்கார்ந்துகொண்டான்.

"மாசக் கடைசியில உனக்குக் சரக்கடிக்க யாரு காசு தந்தா?" என்று அந்த ஆபரேட்டர் கேட்டபோது கீர்த்தனாவுக்கு நெஞ்சில் ஊசி குத்தியது போலிருந்தது. அன்று நிவாஸ் ஷிப்ட் பார்க்காமலேயே வேனில் ரூமிற்குச் சென்றுவிட்டான்.

ஷிப்ட்டில் இருக்கும் போது ஹெல்பர் மகேஷிடம், "நிவாஸும் பவித்ராவும் லவ் பண்ணாங்களா?" என்று கிரேன் ஆபரேட்டர் மோகன் கேட்டபோது கீர்த்தனா திடுக்கிட்டுப் போனாள்.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லனா.. பண்ணியிருந்தா எப்படித் தெரியாம போயிருக்கும்? சொல்லலனாலும் கண்டுபிடிச்சிருப்போம்ல." என்றான்.

"அப்புறம் ஏன் அவன் அப்படி இருக்கான்? லவ் ஃபெயிலியர் ஆனவனாட்டம்? தாடியெல்லாம் வச்சுக்கிட்டு? நம்மகிட்ட எப்படியெல்லாம் பேசிட்டு இருப்பான். இப்ப ஆள் வர்றதும் தெரியல. போறதும் தெரியல. பவித்ரா பொண்ணு எறந்ததலயிருந்துதான் இப்படி இருக்கான்."

"சும்மாவாணா? ரெண்டு வருஷத்துப் பழக்கம். ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் வேற.. பழகின பாசம்தான்ணா.. கொஞ்ச நாள்ல சரியாயிடுவான்."

கீர்த்தனாவுக்கு ரூமில் இருக்கும்போது இருப்பு கொள்ளவில்லை. பவித்ரா, நிவாஸ் இருவரின் போக்கைப் பற்றிச் சரிவர ஆராயாமல் விட்டுவிட்ட மனக்குறை தொந்தரவு செய்துகொண்டிருந்தது. கம்பெனியில் சேர்ந்த நாளிலிருந்து தான் அவர்களோடு இருந்த தருணங்களை ஒவ்வொன்றாக அசைபோட்டுப் பார்த்தாள். காதலித்தார்களா என்ன? ஒன்றும் பிடிபடவில்லை. இந்தப் பாமர மண்டைக்கு இதெல்லாம் தேவைதானா என்றிருந்தது.

அந்நேரத்தில் நிவாஸ் ஃபோனில் கூப்பிட்டான். மனம் பரபரத்தது.

"சொல்லுங்க நிவாஸ்."

"எங்க இருக்க ரூம்லயா?"

"ஆமா!"

"அன்னைக்குப் படத்துக்குப் போனோம்ல்ல?"

"ம்ம்.." 

"அந்தத் தியேட்டர்கிட்ட இருக்கேன். கொஞ்சம் வரியா?"

"எதுக்கு?" -  குரல் தேய்ந்தது 

"ஒரு ஹெல்ப். வா சொல்றேன்."

அவள் பேசாதிருந்தாள்.

"வந்துட்டுக் கூப்பிடு." என்று கட் செய்தான். 

நேரம் பார்த்தாள். ஆறு மணி தாண்டியிருந்தது. ஷோ ஆரம்பிக்கும் நேரம். விபரீதமான கற்பனை வந்தபோது மனது படபடத்தது. பவித்ரா இல்லாத இடத்தைத் தன்மூலம் நிரப்பிக்கொள்ளப் பார்க்கிறானா? அவள் புத்திக்கு எட்டியவரை அவன் பார்வையோ, கையோ அவள்மீது தவறாகப் பட்டதில்லை. தொட்டதில்லை. இருந்தாலும் நம்பகத் தன்மையற்ற ஒரு யோசனை அழியாமல் படர்கிறது. 

தான் படிப்பில் புத்திசாலிதான். பொதுவில் அப்படி இல்லையே! தவிர இந்த ஆண்களைப் படித்தும் புரிந்துகொள்ள முடியாது. பட்டுதான் தெரிந்துகொள்ள வேண்டுமா? போகாமல் இருந்துவிடலாமா? கால் ஃபண்ணுவானே? ஸ்விட்ச் ஆஃப் செய்து விடலாமா?

பெட்டில் உட்கார்ந்து கொஞ்சம் யோசித்தாள். பின், கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்துக்கொண்டாள். ஏதோ உறுத்தியது. அவசரமாய் பேக்கிலிருந்து ஒரு துப்பட்டாவைத் தேடியெடுத்து தன் மார்போடு கவனமாய்ப் போர்த்திக்கொண்டாள். கல்லூரி காலத்தில் இப்படிப் பாங்காய் அணிந்தது ஞாபகம் வந்தது. மீண்டும் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்தாள். துப்பட்டாவோடு இருக்கும் தோற்றம் கூடுதலாய் நம்பிக்கை தந்தது.

ரூமை லாக் செய்துவிட்டு, விறுவிறுவெனப் படிகளில் இறங்கி, சாலையில் நடக்கத் தொடங்கினாள். முச்சந்தியைக் கடக்கும் போது ரூமிற்குத் திரும்பிவிடலாமா என்றிருந்தது. ஹெல்ப் என்றிருந்தானே! ஏதாவது பணத்தேவையாக இருக்குமோ?  உடல் தேவையாக இருந்தால்? அன்று பவித்ராவிடம் தங்கச்சியின் சாயலில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறானே! சாயல் என்றுதானே சொன்னான். தங்கச்சி என்றா சொன்னான்!

அரை யோசனையாய் நடந்து, அவன் வர சொல்லிய இடத்தையே நெருங்கி வந்துவிட்டாள். தியேட்டரின் எதிர்ப்புற புளியமரத்தின் கீழிருக்கும் காரைத்திட்டில் அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் நெஞ்சோரத்தில் பயம் பிடித்துக்கொண்டது. உள்ளுக்குள் மெலிதாய் ஒரு கேவல். தன் மார்பு குறுக்கே இரு கைகளையும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள். 

புளியமரத்திலிருந்து சற்றுத் தள்ளிநிற்கும் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குள் அவளைக் கூட்டிச் சென்றான் நிவாஸ்.

இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணிக்கு முப்பத்தைந்தை நெருங்கியிருக்கும். வெளுத்த தேகம். பூசிய கன்னங்கள். 'பாப் கட்'டில் கொஞ்சத் தூண்டும் முகத்தோடு இருந்தவளின் மேசைமீது, "பிருகா, மனநல மருத்துவர்" என்ற பெயர் பலகை.

"மேம்.. கூட்டிவரச் சொல்லியிருந்தீங்கல்ல..  கூட வொர்க் பண்ற பொண்ணு."

"உங்க பேருமா?"

"கீர்த்தனா மேம்"

"பவித்ரான்றது?"

"ஃப்ரெண்டு மேம்"

"ரெண்டு பேருக்கும் ஃப்ரெண்டா?"

கீர்த்தனா அமைதியாக இருந்தாள்.

"ஆமாம் மேம்." என்றான் நிவாஸ். 

"நீங்க கில்டியா ஃபீல் ஆகுற அளவுக்கு உங்க சைட்ல எந்தத் தப்பும் இல்ல நிவாஸ்."

"இல்ல மேம். அன்னைக்கு நான்தான் ஷிப்ட்டுக்குப் போயிருக்கணும். தூங்கிட்டு இருந்தவள எழுப்பி எனக்குப் பதிலா போகவச்சு நான்தான் சாகடிச்சிட்டேன்."

"ஸீ தம்பி நிவாஸ்.. நீங்க இன்டென்ஷனோட எதுவும் பண்ணல. இது கோயின்சிடன்ட். இதுக்கு முன்னாடியும் இப்படி ஷிப்ட் மாத்திலாம் போயிருக்கீங்கதான?"

தலையாட்டினான்.

"அப்புறமென்ன? இதெல்லாம் நம்ம கைமீறி நடக்கிற விஷயம். யாரையும் பொறுப்பாக்க முடியாது."

"பிசிகல் ரிலேஷன்ஷிப்ல இருந்துட்டோம் மேம். அவ ஞாபகமாவே இருக்கு."

"லவ், லஸ்டுக்கெல்லாம் பெரிய அளவுக்கான ஹார்மோன் வேறுபாடு கிடையாது. ஒரு பெர்சனுக்காக வருந்துறது, கில்ட் ஆகறது.. இதெல்லாம் நல்ல மனிதர்களுக்கான சிம்டம்ஸ். நல்ல மனசோடு இருக்க எல்லாருக்கும் வர பிரச்சனைகள்தான் இது."

"அவ இல்லன்றத என்னால தாங்கிக்கவே முடியல மேம். எல்லாம் முடிஞ்சு போனமாதிரி இருக்கு. வாழவே பிடிக்கல..!" சொல்லும்போதே அவனுக்குக் குரல் தழுதழுத்தது. மனம் கசிவது கண்ணில் தெரிந்தது. தெம்பத் தொடங்கினான்.

கீர்த்தனாவுக்குத் தாங்க முடியாத தாபம் தோற்றியது. அவனை அரவணைப்பதுபோல் அவன் தோளை லேசாகத் தொட்டாள்.  அவளுக்கு இதுவரை பழக்கமில்லாத சூழல். பழக்கமில்லாத பொறுப்பு.

"டூ வீக்ஸ்க்கு டேப்லெட் எழுதித் தரேன். ஃபாலோ பண்ணுங்க மெல்ல மெல்ல ரெக்கவர் ஆயிடலாம்.. நிவாஸ் உங்களுக்கு இருக்கிறது சைக்கலாஜிக்கல் டிஸ்ஆர்டர் இல்ல. வெறும் சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம்ஸ்தான். ஒன் ஆர் டூ மன்ஸ்க்குள்ள சரியாயிடும் டோன்ட் வொரி!" என்றவர் கீர்த்தனாவைப் பார்த்து "கூட இருந்து கொஞ்சம் பாத்துக்கங்கமா." என்றார். 

நிச்சயமாக என்பதுபோல் தலையசைத்தாள் கீர்த்தனா. 

ப்ரிஸ்கிரிப்ஷன் சீட்டை நிவாஸிடம் கொடுத்து டேப்லெட் வாங்கிக்கொள்ளச் சொன்னார். அவன் மருத்துவமனை ஃபார்மஸிக்குள் சென்றான். 

போகும்போது கீர்த்தனாவிடம், "அவங்க ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தானா இல்ல லவ் பண்ணாங்களா? என்று கேட்டாள் பிருகா மேம். 

"தெரியாது மேம்!" என்றாள் கீர்த்தனா.

பைசா கம்மியா இருக்கு ஒரு வாரத்துக்கு மட்டும் டேப்லட் தருவீங்களா என்று ஃபார்மஸியில் கேட்டுக்கொண்டிருந்தவனை இடைமறித்து, "எங்கிட்ட இருக்கு நான் தரேன்" என்றவள் ஜிபே செய்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டாள். 

மருத்துவமனையிலிருந்து வெளியே வரும்போது,  "கூட ஒரு ஆள் இருக்கணும்னு சொன்னாங்க. ரூம்ல இருப்பன்னு உனக்கு கால் பண்ணுனேன்." என்றான். அவளுக்கு மனம் நெகிழ்ந்தது.

"உன் முன்னாடி வேற அழுதுட்டேன்ல!" - தன் அந்தரங்கத்தை ரகசியப்படுத்த தவறியவனாய் அவன் சொல்லியபோது அவளுக்கு தன் ஆன்மா வாடித் தேய்ந்துபோவது போலிருந்தது.

**

ஒரே நாளில் பருவம் மாறியதாய்ப் பட்டது கீர்த்தனாவுக்கு. காலைநேர குளிர் கூடுதலாகப் போர்வைக்குள் அத்துமீறியது. சென்ற வாரம் முழுக்க நைட் ஷிப்ட்டில் இருந்திருக்கிறாள்.  இரவு முழுக்கப் பனிக்காற்று வீசும். அதிலிருந்து விடுபட்டு இந்தக் குளிர் தனித்து அடையாளப்பட்டுத் தெரிந்தது. மார்கழிமாத தனித்துவங்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டாள். 

செகண்ட் ஷிப்ட்தானே இன்றைக்கு என நீண்ட நேரம் போர்வைக்குள் மெத்தனமாய்ச் சுருண்டு கிடந்தாள். நேற்றிரவு ஊறவைத்த துணிகள் துவைப்பதற்குக் கிடக்கின்றன என்ற நினைப்பு வந்ததும் சட்டென எழுந்து குளித்து, மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு வந்தாள். 

மாடியில் துணி துவைத்து உலர்த்த போட்டுக் கொண்டிருந்தபோது நிவாஸ் விடுதியைப் பார்த்தாள்.  இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான் என்ற யோசனை வந்தது. ஒருவார காலத்தில் நல்ல முன்னேற்றம் அவனிடம் இருப்பதை  உணர்ந்தாள்.  பவித்ராவை நினைத்து வாடியிருந்தவன் பழையபடியான சகஜ தன்மைக்குத் தற்போது பழக்கப்பட்டு வருவதாக நம்பினாள். சரியாக ஷிப்ட்டுக்கு வந்து விடுகிறான். மாறி வருவதில்லை. லீவ் போடுவதில்லை. மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டு இரவில் அவனால் அதிகம் விழித்திருக்க முடியாமலிருந்தது. செட்டிங் செக் செய்துவிட்டு கீர்த்தனா மெஷினை கற்றுக்கொண்டுவிட்ட நம்பிக்கையால் தூங்கச் சென்றுவிடுகிறான்.

அவன் பொறுப்புகளையும் சேர்த்துப் பார்ப்பதால் கூடுதலாகக் கொஞ்சம் வேலைப்  பளு அவளுக்கு. ரிப்போர்ட் ஷீட் எழுதும் போது "நீதான மெஷினை ரன் பண்ணன?" என்று மெயின் ஆபரேட்டர் இடத்தில் கீர்த்தனா பெயரையும் சப்போர்ட் ஆபரேட்டர் இடத்தில் அவன் பெயரையும் எழுதியபோது நிவாஸ்மீது கீர்த்தனாவுக்கு மதிப்புக் கூடியது.  

செகண்ட் ஷிப்ட் வேனுக்காக முச்சந்தி சிமெண்ட் திட்டில் உட்கார்ந்துகொண்டு  ஹாஸ்டல் சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். வேன் வர நேரமாயிற்று. அவன் வரும்வரை வேன் வராதிருக்க வேண்டினாள். ஹாஸ்டல் மண்சாலையிலிருந்து அவன் வருவது தென்பட்டதும் உற்சாக வேர்கள் அவள் மனதில் துளிர்விட்டன. பவித்ரா விபத்தான அதே காரைத்திட்டில் அவள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் திட்டினான். அவள் எழுந்து அவனருகில் வந்து நின்றுகொண்டாள்.

ஷிப்டில் கிரேன் ஆபரேட்டர் மோகன் முப்பத்தாறு டன் எடையுள்ள ராட்சஸ காயிலை கிரேன் மூலமாகப் பெருமித்தோடு ஹெஆர் சிலிட்டருக்கு தூக்கி வந்தார். இருப்பதிலேயே உள்விட்ட அளவு அதிகமாக இருக்கும் காயில் அது. சொகுசாக உள்ளே சென்று இருவர் வரைகூடப் படுக்க முடியும். "இந்தக் காயிலை அடையாளம் தெரியுதா?" என்று நிவாஸைப் பார்த்துக் கேட்டார். இரண்டு வருடங்களாக இந்தக் காயில் கம்பெனியில் கிடக்கிறது. ஏதோவொரு கஸ்டமர் தேவைக்காக வாங்கி, பின் கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதையாரும் அடுத்து சீண்டவில்லை.  இப்போது அசோக் லேலண்ட் கேட்டு 'சிலிட்' செய்ய லைனுக்கு வந்திருக்கிறது. நைட் ஷிப்ட்டில் இதில் படுத்து தூங்குவது இனிய அனுபவமாக எல்லோருக்கும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. தூங்குவதற்கு இந்தக் காயிலை அடைய போட்டிகளும் சண்டைகளும் கூட நடந்திருக்கின்றன. 

பவித்ராவும் நிவாஸும் ஒருமுறை இதில்தான் யாருக்கும் தெரியாது ரகசியமாய் ஒருவரோடு ஒருவர் படுத்துப் பின்னிக்கொண்டு இருந்தார்கள். 

காயிலைப் பார்த்த மாத்திரத்திலேயே உள்ளம் பொங்கி, கேவி அழத் தொடங்கிவிட்டான்.  அவன் உணர்ச்சி உருகலைப் பார்த்து விஷயம் புரியாது உறைந்து போனார் கிரேன் ஆபரேட்டர் மோகன். செட்டிங் செக் செய்து கொண்டிருந்த கீர்த்தனா ஓடிவந்து அவனது தோளை அழுத்திக்கொண்டு அவனைத் தேற்ற ஏதேதோ வார்த்தைகளை அவளையறியாமல் சொல்லிக்கொண்டிருந்தாள்.

நிவாஸ் கோட் பாக்கெட்டிலிருந்து கர்சிப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். செட்டிங் போட்டுக்கொண்டிருந்த ஹெல்பர்கள் திகைத்து நின்றனர். யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காமல் ரெஸ்ட் ரூம் போயிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். 

முகம்கழுவி, மனம் தேற்றிவிட்டு வரும்போது சிஆர் சிலிட்டரில் தீபன்ராஜ் இருந்தான். "என்ன கண்ணு செவந்திருக்கு. ராத்திரியெல்லாம் தூக்கமில்லயா?" என்று வம்பிழுத்தான். ஆமோதிப்பதுபோல் நிவாஸ் தலையசைத்தான். 

"தூங்கவிடாம பண்ற அளவுக்கு இப்ப யார் இருக்கா? பவித்ராவும் இல்ல. மார்கழி மாசம் வரைக்குமாவது இருந்திருக்கலாம். பாவம் அதுக்குள்ள போயிட்டா!" என்றான்.

இந்த முறை நிவாஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அமைதியாக இருப்பது பவித்ராவுக்குச் செய்யும் அநீதியாகப்பட்டது அவனுக்கு.

அருகிலிருக்கும் ஸ்கிராப் பிளேட் ஒன்றை எடுத்து தீபன்ராஜ் தலையில் சாத்தினான். மேல் மண்டையிலிருந்து ரத்தம் பீறிட்டது. தலையைப் பிடித்துக்கொண்டு ஓவெனக் கத்தி கீழே சரிந்தான். 

விஷயம் தெரிந்து ஹெல்பர்ஸ் தொடங்கி உயர்மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் ஓடி வந்தனர். அவசரமாய் தீபன்ராஜுக்கு முதலுதவி செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான். கம்பெனியில் விசாரணை உக்கிரமெடுத்தது. போலீஸ் வழக்கு ஆகாமல் பார்த்துக்கொள்ளத் தகுந்த நபர்களைக் கவனிக்க முடிவெடுத்தது நிர்வாகம்.  தீபன்ராஜுக்கு உரிய நிவாரணம் வழங்க திட்டமிட்டார்கள். நிவாஸின் கடைசி மாத பர்ஃபார்மன்ஸ் பார்த்தார்கள் . "பிலோ ஆவரேஜ்" ஆக இருந்தது. வேலையை விட்டு நிற்கச் சொன்னார்கள். மனநிறைவோடு பணிவிலகல் கடிதத்தை எழுதிக்கொடுத்துவிட்டான்.  

எல்லாம் ஒரே நாளில் மாறும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லைதான். இந்த மாறுதல் ஏனோ அவனுக்கு அவசியமாகப்பட்டது.

கம்பெனியிலிருந்து வெளி வரும்போது நிவாஸிடம், நைட் ஷிப்ட் வந்த ஆசிர்வாதம் விஷயம் கேள்விப்பட்டு, "அவன் வாய்த் திமிருக்கு என்னைக்காவது யார்கிட்டயாவது வாங்குவான்னுதான் நினைச்சேன்."  என்றார். 

"அபோலோ டயர்ஸ்ல ஆள் எடுக்குறாங்களாம். பெரியம்மா பையன் அங்கதான் இருக்கான். சொல்லி வைக்கவா?" என்று மோகன் கேட்டார். "இல்லணா. இங்க இருக்கப் புடிக்கல. காலைல ஊருக்குக் கிளம்புறேன். அப்புறம் பாத்துக்கலாம்." என்றான்.

நடந்தேறிய சூழலின் அவலத்தை கீர்த்தனாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நாளையிலிருந்து அவன் ஷிப்ட்டில் இருக்கமாட்டான் என நினைக்கும்போது கசப்புணர்ச்சி வந்தது.

**

வேனியிலிருந்து முச்சந்தியில் இருவரும் இறங்கும்போது வானம் என்னைக்கும் இல்லாத வண்ணமாய் இருட்டியிருந்தது. நேரம் நள்ளிரவு பன்னிரெண்டைத் தொட இருந்தது. முச்சந்தி மின்கம்ப விளக்கு மந்தமாக எரிவதுபோல் இருந்தது. அப்போது நிலவிய நிசப்தம் வெறுமையைத் தந்தது.

இருவரும் மௌனமாய் ஹாஸ்டல் சாலையில் நடக்கத் தொடங்கினர்.

மௌனம் வலித்தது.

பாதிச் சாலையைக் கடக்கும்போது ஏதோவொன்று வழக்கத்துக்கு மாறாக இருப்பதாய் நெருடியது. மண்சாலை கம்பத்தில் மின்விளக்கு எரியவில்லை. நிவாஸ் ஹாஸ்டல்வரை மட்டும் வெளிச்சம் இருந்தது. அதன்பிறகு கும்மிருட்டு. பல்பு பியூஸ் போயிருக்கிறதா அல்லது பழையபடி யாரேனும் கல் எறிந்துவிட்டார்களா என்பது தெரியவில்லை.  

கீர்த்தனா தங்கியிருக்கும் ஹாஸ்டல் கேட்டில் ஒரு பல்பு மட்டும் சன்னமாய் ஒளிர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. 

"இருட்டா இருக்கு. ஹாஸ்டல்வர விட்டுட்டுப் வரேன்" என்றான்.

அவள் தலையசைத்தாள்.

இருவரும் இருள் பாதைக்குள் புகுந்து நடந்தனர்.

இருவருக்கும் தனித்தனி யோசனைகள் இருட்டிற்குள். ஆனாலும் அவர்களுக்குள் அப்போது பவித்ரா இருந்தாள். 

ஹாஸ்டல் கேட்டை நெருங்கும்போது இருவரும் அர்த்தமிகு பார்வையோடு பார்த்துவிட்டுப் பிரிந்துகொண்டனர். 

எதுவும் பேசாதவளாய் அவனிடமிருந்து விலகியவள், தன் மாடியறை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினாள். 

மாடி வராண்டாவில் இருந்துகொண்டு இருட்டில் அவனைத் தேடினாள். ஹாஸ்டல் கேட் லேம்ப் வெளிச்சத்தில் அவன் மெல்ல மெல்ல தெரிவது தொடங்கி ஹாஸ்டலுக்குள் அவன் உருவம் மறைவதுவரை அவனையே கண்கள் அகற்றாமல் பார்த்து நின்றாள்.

அதன்பிறகு கீர்த்தனாவின் அறைவிளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

**

அறை கதவு பலமாய்த் தட்டப்படும் சத்தம் கேட்டு அவனுக்கு விழிப்புத் தட்டியது. எங்கிருந்து சத்தம் வருகிறதென்ற பிரக்ஞை முதலில் அவனுக்கு இல்லை. அறையில் லைட் எரிந்துகொண்டுதான் இருந்தது. அவனுக்கு இமை பிடிவாதமாகத் திறக்க மறுத்தது. படுத்திருந்தவாறே கதவுப் பக்கம் தலையைத்  திருப்பினான். கதவு அதிர்வதுபோல் மங்கலாய்த் தெரிந்தது. சில வினாடிகளுக்குப் பிறகுதான் வாட்ச்மேன் தாத்தாவின் குரல் பதற்றமாய் வெளிப்புறத்தில் முனங்குவது செவிக்கு எட்டியது.   

மணி பார்த்தான். ஐந்தைத் தொடயிருந்தது. ஏதோ விபரீதமாகப்பட்டது. எழுந்துகொண்டு வந்து கதவைத் திறந்தான். வெள்ளைத்தாடி வாட்ச்மேன் தாத்தா பரபரப்போடு தெரிந்தார்.

"தம்பீ.. உன்னப் பாக்க லேடீஸ் ஹாஸ்டல்லயிருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு."

"எங்க?" - புரியாதவனாய் குழப்பத்தில் கேட்டான்.

"கேட்கிட்ட நின்னுகிட்டு இருக்கு!"

மாடி வராண்டாவில் இருந்து எட்டிப் பார்த்தான். ஹாஸ்டல் காம்பவுண்டின் உட்புறத்தில் கேட்ருகே வளர்ந்து நிற்கும் புங்கை மரத்தடியில் கைகளைக் கட்டிக்கொண்டு கீர்த்தனா நின்றுகொண்டிருந்தாள். அதிகாலை பனி மழைத் தூரலாய் அவள்மேல் கொட்டுவதுபோல் லேம்ப் வெளிச்சம் மனமயக்கத்தைத் தந்தது.

நிவாஸுக்கு வியப்பு மேலிட்டது. இந்த நேரத்தில் எதற்கு வந்திருக்கிறாள்? விடிவதற்குள் அப்படியென்ன தலைபோற காரியம்? 

ஆச்சரியம் தாளாமல் படிகளில் இறங்கிக்கொண்டிருக்கும் போது, ​​அவளிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பணம் வாங்கியிருந்தது உரைத்தது.

அவளை நெருங்கி வந்த போதுதான் ஷிப்ட்டிலிருந்த உடையிலிருந்து இன்னும் மாறாமல் இருக்கிறாளென்பது அவனுக்குத் தெரிந்தது. கலையிழந்த அவளது முகம் தூக்கம் கெட்டிருப்பதைக் காட்டியது. 

"உன்னப் பாத்துட்டுப் போலாம்னுதான் இருந்தேன்.." என்று சொல்ல வாந்தவன் பேச்சைப் புத்தியில் வாங்கிக்கொள்ளாமல், அவன் கண்களைத் தெளிவாய்ப் பார்த்து, "நான் உங்கள லவ் பண்றேன் நிவாஸ்!" என்றாள் கீர்த்தனா.

*****

Comments

இவ்வளவு பெரிய கதையை இப்பொழுதுதான் முதல்முறையாக படிக்கிறேன். நான் படித்தது சிவில் ஆக இருந்தாலும் டர்பில் ஈ படித்ததை போல உணர்கிறேன். இதுவரை எந்த கம்பெனிக்கும் வேலைக்கு போகாத நான் காயில் கம்பெனியில் வேலை செய்வதை போல உணர்ந்தேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிவாஸ் காதலை ஏற்று இருக்க மாட்டான் என்று தோன்றுகிறது. சஸ்பென்ஸ் உடன் கதை முடிந்தது ஆர்வத்தை தூண்டுகிறது. பாதம் இரண்டு வர வாய்ப்பு உண்டா ? கீர்த்தனாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
Seyon Mayon said…
வாசகர்களை நிவாஸாக இருந்து பதில் சொல்ல விட்டுவிடுவதுதான் நல்லது. அதுதான் சரியானது. நிறைவானதாகவும் இருக்கும் 🙂

Popular posts from this blog

லதீபா - சிறுகதை